யுஎஸ் ஓபன் அரையிறுதியில் முதல்முறையாக மரியா, எம்மா: ஒரே நாளில் தகர்ந்த சாதனை

டோக்கியோ: யுஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக மரியா சக்கரி, எம்மா ரடுகானு ஆகியோர் முன்னேறி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு(18வயது, 150வது ரேங்க்), சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்(24வயது, 12வது ரேங்க்) ஆகியோர் மோதினர். யுஸ் ஓபன் ஆரம்பித்தது முதலே அடுத்தடுத்து முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கும் எம்மா நேற்றும் ஆச்சர்யத்தை தொடர்ந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெலிண்டாவை ஒரு மணி 22 நிமிடங்களில் 6-3, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

இளவயதில் யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற மரிய ஷரபோவா(ரஷ்யா) சாதனையை நேற்று முன்தினம் கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ்(19 ஆண்டுகள் 2 நாட்கள்) முறியடித்தார். அந்த சாதனையை எம்மா(18 ஆண்டு, 7 மாதம், 26நாட்கள்) ஒரே நாளில் நேற்று முறியடித்துள்ளார். மற்றொரு காலிறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி(26வயது, 18வது ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை கரோலினோ பிளிஸ்கோவா(29வயது, 4வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர். அதில் மரியாவும் ஒரு மணி 22 நிமிடங்களில் 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று, யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.    

இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் லெய்லா-பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலெங்கா(23வயது, 2வது ரேங்க்)), 2வது அரையிறுதியில் எம்மா-சக்காரி ஆகியோர் களம் காண உள்ளனர். நாளை ஆடவர் அரையிறுதி ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (34வயது, 1வது ரேங்க்) 5-7, 6-2, 6-2, 6-3 என்ற செட்களில் இத்தாலி வீரர் மேட்டீயோ பெர்ட்டினியை(25வயது, 8வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(24வயது, 4வது ரேங்க்) 7-6(8-6), 6-3, 6-4 என்ற செட்களில் தென் ஆப்ரிக்க வீரர் லாயிட் ஹாரிசை(24வயது, 46வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ஜோகோவிச்-அலெக்சாண்டர், ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ்(25வயது, 2வது ரேங்க்), கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்(21வயது, 15வது ரேங்க்) ஆகியோர் விளையாடுகின்றனர்.

Related Stories: