பேஸ்புக் கணக்கில் புகுந்து கைவரிசை ஆபாச படத்தை உருவாக்கி பணம் பறிக்கும் ஹேக்கர்கள்: ஒன்றிய, மாநில அரசுக்கு நோட்டீஸ்

நைனிடால்: மக்களின் பேஸ்புக் கணக்கில் புகுந்து ஆபாச படங்களை உருவாக்கி, ஹேக்கர்கள் பணம் பறிப்பதை தடுப்பது தொடர்பாக 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், பேஸ்புக் நிறுவனத்துக்கும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரை சேர்ந்த வக்கீல் ஒருவர் இம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், `எனது பேஸ்புக் முகவரிக்கு வந்த பல நட்பு கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததும், அவை ஆபாச வீடியோ இணையதள முகவரிகளாக மாறிவிட்டன. இவ்வாறாக, போலி பேஸ்புக் முகவரியில் வலம் வரும் ஹேக்கர்கள், நட்பு கோரிக்கை பெற்றதும், அதில் இருக்கும் மக்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, தவறான, ஆபாச வீடியோக்களை உருவாக்குகின்றனர்.

இவற்றை வெளியிட்டு விடுவதாக லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இப்படியாக நானும் மிரட்டப்பட்டேன். இது குறித்து ஹரித்துவார் போலீஸ், டிஜிபி, மாநில உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், போலீசில் இது போன்ற 45 புகார்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஆர்எஸ். சவுகான் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, இணையதள மிரட்டல் குறித்து பேஸ்புக், ஒன்றிய, உத்தரகாண்ட் மாநில அரசுகள் 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>