அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு சாதகமாகி விடக்கூடாது: இந்திய இசை கருவிகள் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ராடெல் எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணைப்படி தங்கள் நிறுவனம் தயாரிக்கும் கருவிகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வரி விலக்கு அளிக்க மறுத்த வணிக வரித்துறை ஆனையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.அனுராதா ஆஜராகி, இந்திய இசைக் கருவிகளுக்கு விலக்கு என்று அறிவித்த தமிழக அரசு மின்னணு முறையில் உற்பத்தியாகும் தங்கள் நிறுவன இசைக் கருவிகளுக்கு வரிவிலக்கு வழங்க மறுக்க முடியாது என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.நன்மாறன் ஆஜராகி, தலைமுறை தலைமுறையாக இசைக்கருவிகளை தயாரிக்கின்ற ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே வரிவிலக்கு வழங்கப்படுகிறது. ஆனால், மனுதாரர் நிறுவனம் இந்திய இசை கருவிகளில் மின்னணு முறையை சேர்த்து கருவிகளை தயாரித்து விற்பனை செய்கிறது. மின்னணு முறையில் இயங்குகின்ற இசைக்கருவிகளுக்கு வரிவிலக்கு வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத்தில் வீணை, வயலின், கடம், மிருதங்கம், தவில், மகுடி, பஞ்சலோக வாத்தியம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை விற்பனை செய்யும்போது வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. வரிவிலக்கு என்பது சலுகை மட்டுமே. விதிகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் அந்த சலுகையை உரிமையாக கோரமுடியாது. வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால் பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்துவிடும். விலைவாசியால் பாதிக்கப்பட்டவர்களையும், நலிவடைந்தவர்களையும், ஏழை மக்களையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே வரிவிலக்கு அமைய வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும்  நிறுவனங்களுக்கு வரிவிலக்கு சாதகமாக அமைந்திடக் கூடாது” என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related Stories:

>