×

சம்பவம் நடந்த போது நீங்கள் தான் முதல்வர். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் அடுக்கடுக்கான கேள்வி: மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி காரசார விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக அரசு அமையும் போது எல்லாம் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். 10 ஆண்டுகால ஆட்சியில் மதச்சண்டை கிடையாது. சாதிச்சண்டை கிடையாது. சாதி மோதல் கிடையாது. நில அபகரிப்பு இல்லை. ரவுடிகள் ராஜ்ஜியம் இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டனர். கட்டப்பஞ்சாயத்து கிடையாது.
அமைச்சர் துரைமுருகன்: ரவுடிகள் இல்லைன்னு சொல்றீங்களே. உங்க ஆட்சி காலத்தில் தான் கத்தியால் கேக் வெட்டி ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாடினார்கள். தூத்துக்குடியில் ஜீப்பின் மேல் ஏறி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினார்களே அது உங்கள் ஆட்சிக்காலத்தில் தானே நடந்தது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: 12.3.1969ல் கலைஞர் பேசிய போது, துப்பாக்கி பிரயோகம் செய்வதை பொறுத்தவரையில் சூட் டூ கில் என்ற கொள்கை தான் கடைபிடிக்கப்படுகிறது. சுடுவதற்கு முன்பு கண்ணீர் புகை, தடியடி பிரயோகம் முதலியன எல்லாம் பயன்படுத்தப்படுகிறது. அது தான் கையாளப்படுகிறது. துப்பாக்கியால் சுடும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு போலீஸ் பொறுப்பல்ல என்று கலைஞர் சொன்னார். இப்படிப்பட்ட நேரத்தில் சிலர் உயிரிழந்தால் அதற்கு போலீஸ் பொறுப்பல்ல என்பதை கலைஞர் சொன்னதை தான் சொல்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கொடநாடு எஸ்டேட் என்பது எதோ சாதாரண இடம் அல்ல. உங்கள் தலைவர், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில்  தான் தங்கியிருப்பார். ஏன் அது முதல்வரின் முகாமாகவே அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அவர் கோப்புக்களை பார்த்து, அதிகாரிகளை சந்தித்தது எல்லாம் நடந்துள்ளது. ஆக அங்கே நடந்த குற்றம் எல்லாம் எதில் போய் சேர்ப்பது. நீங்கள் சொல்கிறீர்கள். சிசிடிவி கேமரா எல்லா இடத்திலும் பொருத்த வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால், பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா அங்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் எதிர்க்கட்சியினருக்கு தெரியாதா. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் நீங்கள் தான் முதல்வர். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். அது தான் எனது கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து விட்டார். அந்த சொத்து வேறு ஒருவருக்கு போய் விட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தால் தான் அந்த வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்:  4 வருடம் நீங்கள் தானே முதல்வராக இருந்தீர்கள். என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: அது ஒரு தனியார் சொத்து. சிசிடிவி கேமரா இயங்குகிறதா, இல்லையா என்பதை நாம் கண்டுபிடிக்க முடியாது. அது தனியார் நிறுவனம். ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை அங்கே காவல்துறையினர் இருந்தனர். அதன்பிறகு காவல்துறை பாதுகாப்பு அங்கு இல்லை. அவர்கள் கேட்டால் பிரச்னை இருந்தால் பாதுகாப்பு வழங்கப்படும். எல்லா அரசுகளும் இதை தான் நடைமுறைப்படுத்தும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கூடாது என்று ஏன் நீதிமன்றத்திற்கு சென்றீர்கள். நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவு போட்டு விட்டது. அதற்கு பிறகும், தடையாணை கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு போனது யார். நீங்கள் தான்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி : எந்த அடிப்படையில் முதல்வர் பேசுகிறார் என்று தெரியவில்லை. அந்த சம்பவம் நடைபெற்ற உடனே வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை நடைபெற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதற்காக பேசுகிறீர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: விசாரணைக்கு தடை கேட்டீர்கள் ஏன்?. அது தான் எனது கேள்வி.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: நான் எங்கே விசாரணைக்கு தடை கேட்டேன். அதில் இருக்கிற சாட்சிகள் தான். 43 பேர் இருக்கின்றனர். அவர்கள் தடை கேட்டதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம். அதை ஏன் தொடர்புப்படுத்தி பேசுகிறீர்கள். நீங்கள் வழக்கை நடத்துங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் புலன் விசாரணை செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏதோ நாங்கள் தடை கேட்டது போன்று குற்றம்சாட்டுகிறீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரி்கை தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகிறது. வேண்டுமென்றே எங்கள் மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அது ஒரு தனிப்பட்ட பிரச்னை. குற்ற நிகழ்வுகள் நடந்தால் எந்த ஒரு அரசாங்கமும் வேண்டுமேன்றே திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்வது. அதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். உண்மை நிலையை கண்டறியுங்கள். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தற்போது லோடு லோடாக குட்கா வருகிறது. எவ்வித தடையும் இல்லாமல் எல்லா பக்கமும் வருகிறது. இதை காவல்துறை பிடிக்கிறார்கள். ஆனால் தடையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: குட்கா இன்னும் இருக்கிறது. அது ஒழிக்கப்படவில்லை. அது ஒழிப்பதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. நீங்களும் ஆட்சியில் இருந்த போது குட்கா சம்பந்தமாக வழக்கு போட்டிருக்கலாம். ஆனால், குட்கா மூலமாக யார், யார் கையூட்டு பெற்று இருக்கிறார்கள். யார், யார் தவறான வகையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியில் இருந்து அமைச்சர் பெயர் வரை அதில் இடம் பெற்றுள்ளது. அதை எதிர்க்கட்சி தலைவர் மறந்து விடக்கூடாது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: அதிமுக ஆட்சிகாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 0.8 சதவீதம் குற்றசம்பவங்கள் குறைந்து கொண்டே இருந்தது.
அமைச்சர் துரைமுருகன் : எங்கள் ஆட்சிக் காலத்தில் வழக்கை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், உங்கள் ஆட்சிக்காலத்தில் அங்க, அங்க, அப்படி,அப்படி சமரசம் பண்ணி முடித்து வைத்ததால் வழக்கு இல்லை. டச் அப் பண்ணியதால் முடிந்து விடுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: ஆன்லைன் மூலம் புகார் செய்யலாம். யாரும் தலையிட முடியாது. ஆன்லைன் புகார் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
அமைச்சர் துரைமுருகன் : எந்த ஆன்லைனில் பண்ணாலும் உங்க லைனே வேற.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் எப்படி செய்ய முடியாது. ஒரு அரசாங்கம் இருக்கிறது. அந்த அரசாங்கம் சட்டப்படி தான் செயல்படுத்த முடியும். நீங்களும் ஆட்சியில் இருந்த போது குட்கா சம்பந்தமாக வழக்கு போட்டிருக்கலாம்.


Tags : BC ,Q. ,Stalin ,Edibati Tannicami Karasara , You were the chief when the incident happened. What action did you take? Chief Minister's question on Kodanadu murder and robbery issue: MK Stalin, Edappadi Palanichamy debate
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...