முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடக்கூடாது என்று தமிழக அரசு சொல்லவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றி, முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தீயணைப்பு துறை, தமிழ்நாடு காவல் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாத்தில் கலந்து கொண்டு திருநெல்வேலி தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன்(பாஜ) பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதித்து அரசு வழிகாட்டுதலோடு அனுமதி வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: விநாயகர் சதுர்த்தி கொண்டாடக் கூடாது என்று அரசு சொல்லவில்லை. கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியுள்ள விதிமுறைகளை பின்பற்றி தான் கொண்டாட கூறியுள்ளோம்.

நயினார் நாகேந்திரன்: தமிழக போலீசாருக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.ஆந்திரா, கர்நாடகாவில் 2 மடங்கும், டெல்லியில் 3 மடங்கும் போலீசாருக்கு சம்பளம் அதிகமாக உள்ளது. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். பலர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டுமென்று சொன்னார்கள். ஏற்கெனவே 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், உயர்த்தப்பட்டது வெறும் அறிவிப்போடு நின்று விட்டது. அந்த அறிவிப்பு தான் இன்று வரையில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு முறைப்படி சட்டமன்றத்திலே சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சி அதைச் செய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு இன்னும் ஒரு நாள்தான் சட்டமன்றம் நடைபெறவிருக்கிறது. திங்கட்கிழமையுடன் அவைக் கூட்டம் முடியவிருக்கிறது. திங்கட்கிழமை அன்று, 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கிடும் வகையில், சட்ட முன்வடிவினை இந்த அவையிலே கொண்டுவந்து, நிறைவேற்றித் தரப் போகிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

* சபாநாயகர் பேச்சால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பேசிக் கொண்டிருந்தபோது, சபாநாயகர் அப்பாவு, மணியை அடித்து, ‘‘நீங்கள் பேசத் தொடங்கி 11 நிமிடங்கள் ஆகிவிட்டது. எனவே, பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்’’ என்றார். அதற்கு நயினார் நாகேந்திரன், ‘எனக்கு அருகிலும் மணி இருக்கிறார்’ என்று, அருகில் இருந்த சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே.மணியை காட்டி பேசினார். அதற்கு சபாநாயகர் மு.அப்பாவு, ‘நீங்கள் மணியை அடித்தால் குற்ற வழக்காகிவிடும். நான் மணி அடித்தால் ஒன்றும் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. இதை தொடர்ந்து, ஜி.கே.மணி பேச எழுந்தபோதும், ‘கவனமா இருந்துக்குங்க’ என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். அவரது பேச்சால் மீண்டும் சிரிப்பை எழுந்தது.

Related Stories:

>