×

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் போலீஸ் அதிகாரிகளின் அதிகார வரம்பு மாற்றியமைப்பு: அரசு அரசாணை பிறப்பித்தது

சென்னை: சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளில் உள்ள போலீஸ் கமிஷனரங்களில் துணை கமிஷனர்களாக பணியாற்றுகிறவர்களின் பணிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், திருப்பூர், கோவை ஆகிய 5 மாநகராட்சிகளிலும் சென்னையைப் போல கமிஷனரகங்கள் இயங்குகின்றன. இந்த நகரங்களில் ஐஜி அந்தஸ்தில் உள்ளவர்கள் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கீழ் எஸ்பி அந்தஸ்தில் உள்ளவர்கள் துணை கமிஷனர்களாகவும், பின்னர் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ளவர்கள் உதவி கமிஷனர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் சென்னையைத் தவிர மற்ற மாநகரங்களில் பணியாற்றும் துணை கமிஷனர்களின் பணிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதில் மதுரை மற்றும் கோவையில் மட்டும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, தலைமையிடம், ஆயுதப்படை ஆகிய 5 பிரிவுகளுக்கு தனித்தனியாக 5 துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி நகரங்களைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு ஒரு துணை கமிஷனர், குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து என இரு பிரிவுக்கும் சேர்த்து ஒரு துணை கமிஷனர் என 2 துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

திருப்பூர் நகரத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஆகிய 3 பிரிவுக்கும் சேர்த்து ஒரு துணை கமிஷனர், தலைமையிடத்துக்கு மட்டும் ஒரு துணை கமிஷனர் என 2 துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு தனித்தனி துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இரண்டுக்கும் தொடர்புடைய குற்றங்கள் நடைபெறும்போது யார் விசாரிப்பது என்ற குழப்பங்கள் நடைபெற்று வந்தன. மேலும் குற்றப்பிரிவில் பணியாற்றுகிறவர்கள் ஏதோ தாங்கள் குறைவான பதவியில் இருப்பதுபோலவும், சட்டம் ஒழுங்கு பதவியில் இருப்பவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பதுபோலவும் காட்டிக் கொள்கின்றனர்.

இதனால் குற்றப்பிரிவில் சீனியர் பணியாற்றினாலும் அவருக்கு அதிகாரம் குறைவாகவே காணப்பட்டு வந்தன. இதனால் அவர்களது பணியிலும் தொய்வு ஏற்பட்டு வந்தது. இதனால் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து அதிகாரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற பரிந்துரைகள் மாநகரங்களில் பணியாற்றும் கமிஷனர்களிடம் இருந்து டிஜிபி சைலேந்திரபாபு மூலம் தமிழக அரசுக்கு சென்றது. இதனால், துணை கமிஷனர்களின் அதிகாரங்களை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கோவை, மதுரை மாநகரங்களில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு பதவிகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. மேலும் இரு மாநகர எல்லை வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு துணை கமிஷனர் மதுரை வடக்கு துணை கமிஷனராகவும், மற்றொரு துணை கமிஷனர் தெற்கு துணை கமிஷனராகவும் பணியாற்றுவார்கள். இவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழங்கு, குற்றப்பிரிவு ஆகியவற்றை சேர்த்து கவனிப்பார்கள். கோவையிலும் வடக்கு, தெற்காக பிரிக்கப்பட்டு இரு துணை கமிஷனர்களுக்கும் எல்லைகள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, தலைமையிடம், ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகள் தொடர்ந்து அந்தப் பணியை கவனிப்பார்கள்.

சேலம் மாநகரத்தைப் பொறுத்தவரை இரு துணை கமிஷனர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு துணை கமிஷனர்களாக பிரிக்கப்படுகின்றனர். அவர்களில் சேலம் தெற்கு துணை கமிஷனர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அவரது எல்லைக்குள் உள்ள போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையையும் சேர்த்து கவனிப்பார். சேலம் தெற்கு துணை கமிஷனர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அவரது எல்லைக்குள் உள்ள போக்குவரத்து ஆகியவற்றை கவனிப்பார்.

திருநெல்வேலி நகரத்தைப் பொறுத்தவரை நெல்லை கிழக்கு துணை கமிஷனர், நெல்லை மேற்கு துணை கமிஷனர் என்று பிரிக்கப்படுகிறது. நெல்லை கிழக்கு துணை கமிஷனராக இருப்பவர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துடன் ஆயுதப்படையையும் சேர்த்து கவனிப்பார். நெல்லை மேற்கு துணை கமிஷனராக இருப்பவர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகியவற்றை மட்டும் கவனிப்பார். திருப்பூரைப் பொறுத்தவரை வடக்கு, தெற்கு என 2 பிரிவாக பிரிக்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு துணை கமிஷனராக இருப்பவர், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றை கவனிப்பார். திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இருப்பவர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அவரது எல்லைக்குள் உள்ள போக்குவரத்து ஆகியவற்றை மட்டும் கவனிப்பார்.

திருச்சி நகரத்தைப் பொறுத்தவரை திருச்சி வடக்கு துணை கமிஷனராக இருப்பவர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகியவற்றை கவனிப்பார். திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இருப்பவர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகியவற்றுடன் ஆயுதப்படையையும் சேர்த்து கவனிப்பார். கோவை, மதுரை ஆகிய நகரங்களைத் தவிர மற்ற நகரங்களின் தலைமையிட துணை கமிஷனர் பணிகளைப் பொறுத்தவரை கமிஷனரே அவற்றை கவனிப்பார்.  இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. குற்றப்பிரிவில் பணியாற்றுகிறவர்களைவிட, சட்டம் ஒழுங்கு பதவியில் இருப்பவர்கள் தங்களை உயர்ந்த பதவியில் இருப்பதுபோல காட்டிக் கொள்கின்றனர்.


Tags : Tamil Nadu , Modification of Jurisdiction of Police Officers in Corporations in Tamil Nadu: Government Order issued
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...