தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனம் சென்னை ஐஐடி.க்கு முதலிடம்: 3வது ஆண்டாக சாதனை

புதுடெல்லி: இந்திய அளவில் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வாகி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாதனை படைத்துள்ளது. நாட்டில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்களின் தர வரிசையை ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான பட்டியலை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது; ஒட்டு மொத்த தர வரிசையில், சென்னை ஐஐடி, டெல்லி, மும்பை, கொரோக்பூர், கான்பூர், கவுகாத்தி, ரூர்கே உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. பல்கலைக் கழகங்களின் வரிசையில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் முதலிடத்தில் உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி, சூரத்கல் கல்லூரி முறையே 9வது, 10வது இடத்தில் உள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை நாட்டில் சிறந்த கல்லூரியாக மிராண்டா ஹவுஸ் தேர்வாகி உள்ளது. 2வது இடத்தில் லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி 3வது இடத்திலும் உள்ளது. கோவை பிஜிஎஸ்ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி முறையே 6வது, 7வது தரவரிசையில் உள்ளன. மருத்துவ கல்லூரிகளில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்திலும், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரிகள் 2வது, 3வது இடத்தில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

Related Stories:

More
>