ஓட்டப்பிடாரம் அருகே வேன் மீது லாரி மோதி 4 பெண்கள் பலி

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள தனியார் உலர் பூ தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். இதற்காக நேற்று காலை 6.30 மணியளவில் சில்லாநத்தம், முப்புலிவெட்டி, புதியம்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்துக் கொண்டு வேன் சென்றது. வேனை பாபு (26) என்பவர் ஓட்டியுள்ளார். சில்லாநத்தம் அருகே வேன் சென்ற போது, எதிரே தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் நோக்கி வந்த தண்ணீர் டேங்கர் லாரி நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த செல்வராணி (45), சந்தியா (48), காமாட்சி என்ற ஜோதி (40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிராம மக்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை (20) என்பவர் இறந்தார். லாரி, வேன் டிரைவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

More
>