×

‘பொருநை’ அருங்காட்சியகத்தில் இடம்பெறும் அபூர்வ பொருட்கள்: காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தகவல்

நெல்லை: நெல்லை மாநகரில் 15 கோடி ரூபாய் மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர்கள் இது பெருமைக்குரிய, வரவேற்கதக்க நடவடிக்கை என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியானதும் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  இது குறித்து காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி கூறியதாவது: ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது அபூர்வ பொருட்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. குறிப்பாக தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டைகள் கிடைத்துள்ளன.

வீட்டின் மூத்த உறுப்பினர் இறந்தால் அவரது நெற்றியில் இந்த தங்கப்பட்டையை வைத்து ஈமத்தாழியில் வைப்பது முன்பு வழக்கமாக இருந்துள்ளது. தாமிரத்தால் ஆன பெண் உருவங்கள். வெண்கல பாத்திரம், இரும்பு ஆயுதம், சிகப்பு, கருப்புநிற பானைகள், கிண்ணங்கள், அரிய கல்மணிகள், எலும்பு மணிகள், தந்தத்தினால் செய்யப்பட்ட மணி, செம்பு, இரும்பு மோதிரம், வட்ட சில்லுகள், வளையல் துண்டுகள், அரவை கற்கள் போன்றவை கிடைத்துள்ளன. சிவகளை பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல் கரிம பகுப்பாய்வில் இதன் காலம் கிமு 1155 என காலவரையரை செய்யப்பட்டுள்ளது.

அவை மக்கள் பார்வைக்காக ஆவணப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும்  3,200 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த பல அபூர்வ பொருட்கள் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது. ஏரல் அருகே கொற்கையில் மேற்கொள்ளப்படும் தொல்லியல் அகழாய்வில் பலவகையான தொல்பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. புதிய அருங்காட்சியகம் அமைவதன் மூலம் வருங்கால இளைய தலைமுறையினர், முந்தைய தமிழரின் வாழக்கை முறையை குறிப்பாக பொருநை நதிக்கரை பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள முடியும். வரலாற்று ஆராய்சியாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த காட்சியகம் பேருதவியாக இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

Tags : Porunai ,Kapatsiyar Sivasathiyavalli , Rare items in the ‘Porunai’ Museum: Information by Kapatsiyar Sivasathiyavalli
× RELATED பொருநை புத்தக திருவிழாவில் சிறுதானிய உணவு போட்டியில் மாணவிகள் அசத்தல்