×

மாமல்லபுரம் கண்காட்சி திடலில் விற்பனை கூடங்கள்: அரசு முதன்மை செயலாளர் திறந்து வைத்தார்

மாமல்லபுரம்: பூம்புகார் எனப்படும் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம், தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்த. அவர்களுக்கு சமூக பொருளாதார பாதுகாப்பு, கைத்தொழில், கலை படைப்பு அர்ப்பணிப்பை அங்கீகரித்தல் ஆகிய பணிகளை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுத்துகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியில் இந்நிறுவனம் மாமல்லபுரம் இசிஆர் சாலையில் சுமார் 4.45 ஏக்கரில் ரூ.4.24 கோடி செலவில் கைவினை கலைஞர்களுக்காக நகர்ப்புற கண்காட்சி திடலை அமைத்துள்ளது.

இங்கு, சிற்பிகள் செதுக்கிய சிலைகள் விற்பனை செய்ய 36 கூடம், வெளியரங்கம், கைவினை கலைஞர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திடல் கடந்த 2018ம் துவங்கி பிறகு நடைமுறையில் இல்லாமல் ஆனது. சமீபத்தில், அமைச்சர் தா.ேமா.அன்பரசன் ஆய்வு செய்து, இந்த திடலில் நோக்கத்தை துரிதமாக செயல்படுத்த அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து, அங்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு, முதல் கட்டமாக உணவு கூடம் துவங்கப்பட்டுள்ளது. இந்த உணவு கூடம், மன நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களை கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. லாப நோக்கமற்ற மனநோயாளிகள், புழல் சிறை கைதிகள் ஆகியோரின் மேம்பாட்டுக்காக செயல்படும் சென்னை மிஷன் என்ற அறக்கட்டளை இணைந்து செயல்படுத்துகிறது.

இதில் கிடைக்கும் லாபத்தை சிற்பிகள் மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்த உள்ளது. மேலும், கண்காட்சி திடலில் சிற்பிகள் உற்பத்தி செய்யும் பஞ்சலோக சிலைகள், பித்தளை பொருட்கள், மரச்சிற்பம், கற் சிற்பம், தஞ்சாவூர் ஓவியம், களிமண், காகிதக் கூழ் பொம்மைகள், சுடு களிமண் சிற்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தி நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், உணவு கூடம் மற்றும் சிற்பிகளுக்கான விற்பனை கூடங்களை கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை ஆகியவற்றின் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது, பூம்புகார் மேலாண் இயக்குநர் ஷோபனா, காதி கிராப்ட் தலைமை செயல் அலுவலர் சங்கர், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Sales Stalls ,Mamallapuram Exhibition Grounds ,Chief Secretary , Sales Stalls at Mamallapuram Exhibition Grounds: Chief Secretary to Government inaugurated
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...