எம் சாண்ட் ஏற்றிவரும் டிரைவர்கள் மீது பொய் வழக்கு: கைவிலங்குடன் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்சாண்ட் லாரி டிரைவர்கள் மீது பொய் வழக்குப் போடும் போலீசாரை கண்டித்து எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள், மற்றும் டிரைவர்கள் கை விலங்கு அணிந்து கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல் 150க்கும் மேற்பட்ட எம் சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களுக்கு,லாரிகள் மூலம் எம்சாண்ட் அனுப்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பணம் கொடுத்து, லாரி மூலம் எம்சாண்ட் எடுத்து செல்லும்போது, அதிகாரிகள் மற்றும் போலீசார் மறித்து நிறுத்தி லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்புகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனுமதி பெறாத எம் சாண்ட் நிறுவனங்களை கண்டுபிடித்து கனிமவளத்துறை நடவடிக்கை எடுக்காமல், லாரி உரிமையாளர்கள் டிரைவர்கள் மீது வழக்குப் போடுவதை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு எம் சாண்ட் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

இதற்காக சங்த மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கைகளில் விலங்கிட்டு நூதன முறையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையிலும் தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையிலும் காவலான்கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் போலீசார், அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், கலெக்டர் ஆர்த்தியை சந்தித்து, எம் சாண்ட் நிறுவனங்களை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும், அனுமதி பெறாத எம்சாண்ட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Related Stories:

>