×

தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம்: பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் கவர்னராக மாற்றம்

சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அவர் டெல்லி சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். இந்நிலையில் அவர் கண்டிப்பாக மாற்றப்படுவார் என்று டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வேகமாக பரவியது. இதற்கிடையே, பஞ்சாப் மாநில பொறுப்பு கவர்னராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு குடியரசு மாளிகை வெளியிட்டுள்ள தகவல்: தமிழகத்தின் புதிய கவர்னராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என். ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இவர், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி முதல் நாகலாந்து கவர்னராக பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 69. இதற்கு முன்பாக, கடந்த 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்தார். மேலும் 2012ம் ஆண்டு ஒன்றிய அரசின் உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், 1976ம் ஆண்டு, கேரளா கேடர் ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், பஞ்சாப் பொறுப்பு கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், தமிழக கவர்னர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இந்நிலையில், நாகலாந்து கவர்னராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக புதிய கவர்னராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, விரைவில் தமிழகம் வந்து கவர்னராக பொறுப்பேற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தது. இந்த திடீர் மாற்றம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : TN ,Ravi ,Banwaral Prakid ,Punjab , RN Ravi appointed new Governor of Tamil Nadu: Banwarilal Purohit appointed Governor of Punjab
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...