×

இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் பொது இடங்களில் சிலை வைத்தால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு; வீடுகளில் வைத்து வழிபட வேண்டுகோள்; பூ, பழம் விற்பனை களைகட்டியது

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் சிலை வைக்கவோ மற்றும் ஊர்வலமாக எடுத்து செல்லவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதையும் மீறி யாரேனும் சென்னையில் சிலைகள் வைத்தாலோ அல்லது சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட தடையில்லை. நேற்று பூ, பழம் விற்பனை களைக்கட்டியது. விலையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாங்கி சென்றனர்.

 நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதலே விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக கொண்டு செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவ்வாறு வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை தனிநபர் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்துக்கொள்ளலாம் என்றும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே பூஜை பொருட்களை வாங்க கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. விலை அதிகமாக இருந்த போதிலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

மேலும் பூ, பழம் விற்பனை ஜோராக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் ஒரு நாளில் வருவதால் வழக்கத்தை விட பூ, பழங்கள் விலை இரண்டு மடங்காக அதிகரித்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ.200ல் இருந்து நான்கு மடங்காக உயர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை, ரூ.150ல் இருந்து ரூ.480க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.900க்கும், செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.350 வரையிலும் நேற்று பூ சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரச்னைகளுக்கு உள்ளான இடங்களான திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, மண்ணடி, பெரியமேடு, சைதாப்பேட்டை, புளியந்தோப்பு, ராயபுரம், தாம்பரம், கொருக்குபேட்டை, வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி என 20க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது. இந்து அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை நடத்தி தமிழக அரசு வழிகாட்டு நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

மேலும், சென்னை மாநகரம் முழுவதும் 12 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் தடையை மீறி பொது இடங்களில் பந்தல்கள் அமைத்து விநாயகர் சிலை வைத்தல் மற்றும் ஊர்வலமாக எடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
* கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல் மற்றும் பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதே போல விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கூட்டமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனி நபர்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
* சென்னையை பொறுத்தவரை, சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
* மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள், இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
* தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்து செல்லலாம். இங்கு வைக்கப்படும் சிலைகளை முறையாக விசர்ஜனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல்
விநாயகர் சதூர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி, சென்னையில் வேலை, வியாபாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்காக தங்கியுள்ள ஏராளமானோர் தங்களது சொந்த ஊரில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடவும், விடுமுறையை கழிப்பதற்காகவும் நேற்று மாலை முதல் கார், வேன், டூ வீலரில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல தொடங்கினர். இதனால் சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியிலிருந்து சிங்கபெருமாள்கோயில் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வாகன நெரிசலால் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Tags : Ganesha Chaturthi Festival ,Tamil Nadu , Ganesha Chaturthi Festival Celebration Today Placing Statue in Public Places Action: Government of Tamil Nadu Announcement; Request to keep and worship in homes; Flower and fruit sales weeded out
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...