×

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரம்

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 56 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசு உற்பத்தி ஆகிறது. தீபாவளி நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது. பூச்சட்டி, தரை சக்கரம், சரவெடி போன்ற வழக்கமான பட்டாசுகளை காட்டிலும், இளம் வயதினர் பேன்சி ரக பட்டாசுகளை அதிகளவில் விரும்புவதால் அவற்றை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருவதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் பொன்குமார் கூறுகையில், ‘‘கொரோனா பரவல், காற்று மாசுவால் கடந்த ஆண்டு ராஜஸ்தான், ஒடிசா, புதுடில்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால், சுமார் ரூ.1,000 கோடி அளவில் பட்டாசு தேக்கம் அடைந்தது. வெளிமாநிலங்களில் சில வியாபாரிகள் இந்த ஆண்டு விற்பனைக்கு அதையே ஸ்டாக் வைத்துள்ளனர். சில வியாபாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். ஸ்டாக் தேக்கம், விற்பனை பாதிப்பால் நடப்பாண்டு உற்பத்திக்கு சிவகாசியில் காலதாமதமாகவே பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன. வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்க முடிந்ததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். நடப்பாண்டு 40 சதவீத உற்பத்தி மட்டுமே நடக்கிறது.

பட்டாசு மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக பட்டாசு விலையையும் உயர்த்த வேண்டியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வியாபாரிகளிடம் உள்ள ஸ்டாக் காரணமாக மூலப்பொருட்கள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப பட்டாசு விலையை அதிகரிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொறு நிறுவனத்திற்கேற்ப 10 முதல் 20 சதவீத விலையேற்றம் இருக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி தீபாவளி அன்று நாடு முழுவதிலும் கட்டுப்பாடுகளின்றி பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும். பட்டாசு தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Sivagasi ,Diwali , Deepavali festival, fireworks
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...