டெல்டாவில் 12ம் தேதி மெகா முகாம்: 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: 6,811 இடங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருச்சி: டெல்டாவில் வரும் 12ம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 6811 இடங்களில் முகாம் நடத்த முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேநேரம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தினம்தோறும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 4ம் தேதி 6.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், கடந்த ஜனவரி 16 முதல் மே 6ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியிருந்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த 103 நாட்களில் 63 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.  அன்று தடுப்பூசிகளை கேட்டு பெறாததன் காரணமாக தமிழ்நாடு தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் வரிசையில் 9வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு- கேரளா எல்லையில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது கடினமான ஒன்று. ஆனால் அதிகாரிகள் இதை திறம்பட கையாண்டு வருகின்றனர். கேரள எல்லையை ஒட்டிய 9 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக வைத்து அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வரும் 12ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது என்றார். அந்த வகையில் வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம்களை நடத்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அன்றைய தினம் 43,051 சிறப்பு முகாம்கள் மூலம் 36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் மாவட்ட வாரியாக சிறப்பு முகாம் அமைத்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், வருவாய் துறையினர், உள்ளாட்சி துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை இந்த பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் உள்ளது.

அதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 619 சிறப்பு முகாம்கள் மூலம் 34,785 பேர், அரியலூர் மாவட்டத்தில் 493 முகாம்களில் 39,406 பேர், கரூர் மாவட்டத்தில் 706 முகாம்கள் மூலம் 52,033 பேர், மயிலாடுதுறையில் 400 முகாம்கள் மூலம் 51,242 பேர், நாகை மாவட்டத்தில் 564 முகாம்கள் மூலம் 30,833 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் 356 முகாம்கள் மூலம் 27,593 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 653 முகாம்கள் மூலம் 43,190 பேர், தஞ்சை மாவட்டத்தில் 1,550 முகாம்கள் மூலம் 1,28,564 பேர், திருச்சி மாவட்டத்தில் 1,470 முகாம்கள் மூலம் 1,37,593 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 816 முகாம்கள் மூலம் 63,217 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பொது சுகதாரத்தறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் 6,08,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.  இந்த தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடக்கிறது. எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>