ராஜ்யசபா எம்.பி. பதவி யாருக்கு?: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மோதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி வாயிலாக தேர்வுபெறும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை பிடிக்க ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக அதிமுகவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 6ம் தேதியோடு முடிகிறது. இதையடுத்து மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே போட்டி நிலவுகிறது.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் என்.ரங்கசாமி பிடிவாதமாக உள்ளார். அவருக்கு அழுத்தம் கொடுத்து எம்.பி. பதவியை பெறுவதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளது. இதனால் தம்மை தொடர்பு கொள்ளும் பாஜக மேலிட தலைவர்களை ரங்கசாமி புறக்கணித்து வருகிறார். அண்மையில் ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுபெற வேண்டியுள்ளது.

எனவே அவருக்கு எம்.பி. பதவியை கொடுக்கவே பாஜக முயற்சி செய்வதாக ரங்கசாமி கருதுகிறார். ஏற்கனவே சபாநாயகர் பதவி, அமைச்சரவையில் பங்கீட்டில் ரங்கசாமிக்கும், பாஜக மேலிடத்திற்கும் மோதல் ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூக முடிவு எட்டப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: