திருப்பத்தூர் மாவட்டத்தில் உலக வங்கியின் மூலம் 3.85 கோடியில் 49 ஏரிகள் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தகவல்

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டத்தில் உலக வங்கியின் மூலம் 3.85 கோடியில் 49 ஏரிகள் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் மூன்று ஏரிகள் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 49 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிகள் அனைத்தும் பெரிய ஏரிகள் ஆகும். கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் காட்டாற்று வெள்ளம் அருகே உள்ள ஏரி பகுதிகளுக்கு சென்று உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 3 ஏரிகள் நிரம்பி உள்ளது.

அதில் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஏரி, ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் ஏரி, வாணியம்பாடி அருகே உள்ள பள்ளிப்பட்டு ஏரி, இந்த 3 ஏரிகள் நிறைந்து உள்ளது. இதனால் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு வாய்க்கால் வழியாக தண்ணீர்  செல்வதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளும் உலக வங்கியின் மூலம் 3 கோடியே 85 லட்சம் மதிப்பில் கரை பலப்படுத்தும் பணி, கால்வாய்களை தூர்வாரும் பணி, கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம், உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அனைத்து ஏரிகளுக்கு தண்ணீர் வர வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது மாவட்டத்தில் 3 ஏரிகள் நிரம்பி உள்ளது. மேலும் உள்ள ஏரிகள் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதில் குரும்பேரி ஏரி, ஏலகிரி மலை, சிம்ம புதூர் ஏரி, மாடப்பள்ளி ஏரி, திருப்பத்தூர் பெரிய ஏரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகள் 90 சதவீதம் நிரம்பி உள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களுக்குள் மழை பெய்தால் இந்த ஏரிகளும் நிரம்பி வாய்க்கால் வழியாக உபரி நீர் செல்லும். இதனால் சுமார் 500 ஏக்கர் பரப்பில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும் இந்த ஏரியில் நிறைந்துள்ள நீர் தேக்கி வைக்கப்படுவதால் அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோடை காலங்களிலும், விவசாய பணிகள் நடைபெறும் காலங்களிலும் மதகுகளை திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>