எதிர்காலத்தில் பண்டிகைகளை கொண்டாடலாம்; தற்போது உடல்நலமே முக்கியம்!: மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்‍கு தடை..!!

மும்பை: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் முக்கிய மத நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மஹாராஷ்ட்ராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்‍கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மஹாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பொது இடங்களில் மண்டபம் அமைப்பதோ, பந்தல் அமைப்பதோ கூடாது என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. மக்‍கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகரை வழிபடவும், பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்‍கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கூட பண்டிகைகளை கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ள மும்பை மேயர், ஆனால் தற்போதைய சூழலில் உடல் நலனே முக்‍கியம் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கும் அனுமதியில்லை என்று அறிவித்துள்ள ஆணையம், பொதுமக்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு டெல்லி அரசை கேட்டு கொண்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் அரசு சார்பில் நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். ஆனால் மக்‍கள் தங்கள் இல்லத்தில் இருந்தே நிகழ்ச்சியை கண்டுகளித்து விநாயகர் சதுர்த்தியை  கொண்டாடுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories:

More