×

நிலக்கரியால் இயங்கும் என்ஜினுடன் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மலை ரயில் சோதனை ஓட்டம்

மேட்டுப்பாளையம்: முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நிலக்கரியால் இயங்கும் என்ஜினுடன் ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் 100 ஆண்டுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு நிலக்கரியால் இயங்கும் முதல் மலை ரயில் இன்ஜின் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் லாரியில் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் இருப்பு பாதையில் இறக்கி வைக்கப்பட்டது. அந்த இன்ஜினை இணைத்து மலை ரயில் சோதனை ஓட்டம்  நடைபெற்றது. தென்னக ரயில்வே துணை இயக்குநர் சதீஷ் சரவணன் (நீலகிரி மலை ரயில் பாரம்பரியம்), திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தயாரிப்பு உதவி பணி மேலாளர் சுப்ரமணியம், மூத்தப்பகுதி பொறியாளர் கணேஷ் மோகன், கண்காணிப்பாளர் சுப்ரமணியம் மேற்பார்வையில் மலை ரயில் என்ஜினுடன் 2 பெட்டிகளை இணைத்து மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து ரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்தியாவில் இதுவரை பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் மலை ரயில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு நிலக்கரியால் இயக்கும் மலை ரயில் இன்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 10 மாதங்களாக கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டது. தற்போது இரு பெட்டிகளை மட்டும் இணைத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஹில்குரோவ் ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர், குன்னூரில் உள்ள மலை ரயில் பராமரிப்பு கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்ஜினில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து அதிகபட்சமாக இன்னும் 20 நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும்’’ என்றனர்.

Tags : With a coal-fired engine At 13 km. Mountain train test run at speed
× RELATED மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம்...