×

ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் திசைமாறி சென்ற தரங்கம்பாடி மீனவர் படகில் ரூ.20 லட்சம் பொருட்கள் கொள்ளை: ஆந்திர மாநில மீனவர்கள் மீது புகார்

மயிலாடுதுறை: ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் திசைமாறி சென்ற தரங்கம்பாடி மீனவர் படகில் இருந்த ரூ.20லட்சம் பொருட்களை ஆந்திர மாநில மீனவர்கள் கொள்ளையடித்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் பிரபு (39). மீனவரான இவர், இவருக்கு சொந்தமான 240 சிசி திறன் கொண்ட விசைப்படகில், அந்த பகுதிரயை சேர்ந்த மீனவர்கள் 8 பேருடன் கடந்த ஜூலை 12ம் தேதி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஜிபிஎஸ் கருவி திடீர் பழுதடைந்ததால் திசைமாறி ஆந்திர மாநில கடல் பகுதிக்கு சென்றனர். திசைமாறி மீனவர்களுடன் சென்ற இந்த படகினை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகை சிறை பிடித்தனர்.

தகவலறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆந்திர மாநிலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தரங்கம்பாடி மீனவர்கள் 9 பேரை விடுவித்த ஆந்திர மாநில மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகினை மட்டும் விடுவிக்க மறுத்து விட்டனர். இதனால் மீனவர்களுடன் மட்டும் மீனவ பஞ்சாயத்தார் தரங்கம்பாடி திரும்பினர். கிருஷ்ணாம்பட்டினத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் இந்த விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார், தமிழக அரசு உதவியுடன் கடந்த 6ம்தேதி மீண்டும் ஆந்திர மாநிலம் சென்றனர். பின்னர் மாவட்ட கலெக்டர் மூலம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் விசைப்படகினை ஆந்திர மாநில மீனவர்கள் விடுவித்தனர். இதையடுத்து தரங்கம்பாடி துறைமுகத்துக்கு விசைப்படகு நேற்று கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த விசை படகில் இருந்த வலைகள், பேட்டரி, டீசல் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஆந்திர மீனவர்கள் அபகரித்து கொண்டதாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தரங்கம்பாடி மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

Tags : Tharangambadi , Tharangambadi fishing boat diverted due to GPS malfunction Rs 20 lakh looted: Complaint against Andhra fishermen
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...