×

முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் உழவார பணிகளில் விவசாயிகள் தீவிரம்

சாயல்குடி:  பருவ மழை துவங்க உள்ள நிலையில் விவசாய நிலங்களில் உழவு பணிகளை செய்து, நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பிரதான மழையாக உள்ளது. இதனை நம்பி மானாவாரி விவசாயம் செய்யப்படுகிறது. அனைத்து பகுதியிலும் நெல் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. அடுத்தப்படியாக கம்பு, சோளம் வகை போன்ற சிறுதானிய பயிர்கள், மிளகாய் போன்ற தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துகளும் பயிரிப்படுகிறது. ஆவணி மாதத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், அதன் தாக்கம் குற்றாலம் முதல் ராமநாதபுரம், தொண்டி வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்புகின்றனர். இந்நிலையில் கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்தது. இதனையடுத்து விவசாயிகள் வயற்காட்டில் முள்செடிகளை அப்புறப்படுத்தி, வரம்புகளை சீரமைத்தனர். வயலில் டிராக்டரை கொண்டு உழுது, நெல் விதைகளை விதைத்து வருகின்றனர்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடர் வறட்சியால், சில விவசாய நிலங்களில் விவசாயம் செய்யாமல் விட்டனர். அதனால் சீமை கருவேல மரம் வளர்ந்து கிடந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக போதிய பருவ மழை பெய்து வருவதால் தரிசாக விடப்பட்ட வயற்காடுகளை சீரமைத்து விளைநிலங்களாக மாற்றி, உழவார பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் கூறும்போது, தரிசான வயற்காடுகளில் சீமை கருவேல மரச்செடிகளை அகற்றுதல், பழைய காய்ந்த செடி, கொடிகள், நெல் தாழை போன்றவற்றை தீயிட்டு கொழுத்துதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை செய்து வந்தோம். தற்போது மழை பெய்து வருவதால் டிராக்டரை கொண்டு உழுது முதற்கட்டமாக நெல் விதைகளை விதைத்து வருகிறோம். அடுத்த ஓரிரு வாரங்களில் மாவட்டத்தின் பிரதான மழையான வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால் விதைக்கப்பட்ட விதைகள் பயிராக முளைக்கும். தொடர்ந்து மழை பெய்தால், விவசாய பணிகள் நடைபெறும் என்றனர்.



Tags : Mudukulathur ,Kataladi , Farmers intensify farming activities in Mudukulathur and Kataladi areas
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...