நாளை விநாயகர் சதுர்த்தி!: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விதை விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்..!!

சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விதை விநாயகர், மரங்கள் உள்ளிட்டவைகளால் உருவாக்கப்பட்ட சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்படும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதில் 80 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விதை விநாயகர், பஞ்சலோகம், பேப்பர் கூழ், மரங்கள் உள்ளிட்டவைகளால் உருவாக்கப்பட்ட சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தஞ்சாவூர் ஓவியம், கலைத்தட்டுகளில் என பலவகை வடிவங்களில் ஆன கைகளால் செய்யப்பட்ட சிலைகளும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன. கடலூரில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட கூடாது என காவல்துறையினர் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுமாறு அறிவுறுத்திய போலீசார், விழா முடிந்ததும் அவரவர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க தனிமனித இடைவெளியை கடைபிடித்து உரிய பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Related Stories:

More