×

நண்பர்கள் குழுவுக்கு ‘நான் தான் டான்’ என தகராறு பட்டதாரி வாலிபரை கொலை செய்து பட்டினப்பாக்கம் கடலில் உடல் வீச்சு: நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கடற்கரை பகுதியில் மதுகுடிக்கும்போது ‘யார் டான்’ என்று ஏற்பட்ட தகராறில் பட்டதாரி நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்து பட்டினப்பாக்கம் கடலில் வீசிய சம்பவம் சென்னையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடையார் பசுமைவழிச்சாலை பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம்(50) என்பவர் கடந்த 5ம் தேதி, அபிராமபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிசிஏ படித்துள்ள எனது மகன் மகேஷ்வரனை(25), 4ம் தேதி முதல் காணவில்லை. அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே எனது மகனை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருந்தார்.

அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஷ்வரன் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து தேடி வந்தனர். இதற்கிடையே பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் காயங்களுடன் வாலிபர் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து, பட்டினப்பாக்கம் போலீசார், காணாமல்போன மகேஷ்வரன் புகைப்படத்தை வைத்து ஒப்பிட்டு பார்த்தபோது ஒரே சாயலில் இருந்தது. இது குறித்து அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்தது மகேஷ்வரன் என தெரியவந்தது. பிறகு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு அன்னை சத்தியா நகர் 6வது தெருவை சேர்ந்த கார்த்திக்(24) என்ற வாலிபர் சரணடைந்தார். என் நண்பன் மகேஷ்வரனை, நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தான். அதைதொடர்ந்து கார்த்திக், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.  நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கார்த்திக்கின் நீண்ட கால நண்பர் மகேஷ்வரன். இவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள். மகேஷ்வரனுக்கு தனக்கென்று, நண்பர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அதில் கார்த்திக்கும் ஒருவர். ஆனால், வயதில் பெரியவனான மகேஷ்வரன், சொல்வதை தான் அவரது நண்பர்கள் கேட்டுவந்தனர். இது கார்த்திக்குக்கு பிடிக்கவில்லை. அதே சமயம், கார்த்திக் மீது அடிதடி உள்ளிட்ட சிறு சிறு குற்ற வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி காத்த்திக் பட்டினப்பாக்கம் முகத்துவாரத்திற்கு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மதுபாட்டில்கள் வாங்கி வந்துள்ளார். இரவு வீட்டில் தூங்கிய மகேஷ்வரனை செல்போன் மூலம் அழைத்து முகத்துவாரத் திற்கு வரவழைத்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் அனைவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது கார்த்திக் மதுபோதையில் இனி நான் சொல்வதை தான் மகேஷ்வரன் கேட்க வேண்டும். நமது நண்பர்கள் கூட்டத்திற்கு ‘நான் தான் டான்’ என்று கூறியுள்ளார். இதனால் கார்த்திக்கிற்கும் மகேஷ்வரனுக்கும் இடையே போதையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மகேஷ்வரன் கார்த்திக்கை அடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால், கார்த்திக் திடீரென கத்தியை எடுத்து மகேஷ்வரன் தலை உள்பட உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதற்கு உடன் வந்த 2 பேரும் உதவியுள்ளனர். இதில், மகேஷ்வரன் இறந்துவிட்டான். உடனே, கார்த்திக் தனது நண்பர்கள் உதவியுடன் அடையார் முகத்துவாரத்தில் கடலில் இறங்கி சற்று தொலையில் வீசிவிட்டனர். போலீசார் செல்போன் சிக்னல் மூலம் கண்டிப்பாக பிடித்துவிடுவார்கள் என்பதால் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Rowdy , Group of friends, dispute, murder of graduate teenager, court,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...