சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு இந்தோனேசியா கப்பல் கேப்டனிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

சென்னை: துபாய் செல்ல வந்த இந்தோனேசியா நாட்டை சேர்ந்த கப்பல் கேப்டனிடமிருந்து தடை செய்யப்பட்ட  சேட்டிலைட் போனை சென்னை ஏர்போர்ட் பாதுகாப்பு  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று துபாய்க்கு புறப்பட தயாரானது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது இந்தோனேசியா நாட்டை சேர்ந்த ஒரு பயணியிடம் நமது நாட்டில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. விசாரணையில், இந்தோனேசியா நாட்டை சேர்ந்த அவர், கப்பல் கேப்டனாக பணியாற்றுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்றுக்கு கேப்டனாக  கடல் மார்க்கமாக சென்னை வந்துள்ளார். அப்போது அவர் சேட்டிலைட் போனுடன் வந்துள்ளார். மேலும் அவர்கள்  நாட்டில் சேட்டிலைட் போனுக்கு தடை கிடையாது. எனவே எடுத்து வந்துள்ளதாக கூறினார்.  ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள், ‘‘எங்கள் நாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக, சேட்டிலைட் போன் உபயோகிப்பதை அரசு தடைசெய்துள்ளது. தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் வந்தார். முறைப்படி எங்கள் நாட்டு அதிகாரிகளான சுங்கத்துறையிடம் ஒப்படைக்கவேண்டும். உங்கள் நாட்டிற்கு மீண்டும் திரும்பி செல்லும்போதுதான் போனை திரும்ப பெறவேண்டும் என்பது எங்கள் நாட்டு விதிமுறை. அதை மீறி நீங்கள் செயல்பட்டுள்ளீர்கள்.

உங்களுடைய சேட்டிலைட் போனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், நீங்களே வைத்து உபயோகித்துள்ளீர்கள். எனவே உங்களிடமிருந்து சேட்டிலைட் போனை பறிமுதல் செய்கிறோம்’’ என்று கூறினர். அதோடு இந்தோனேசியா நாட்டு கப்பல் கேப்டனிடமிருந்து சேட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். அவர் அந்த போனை இந்தியாவில் உபயோகப்படுத்தி யாரிடமெல்லாம் பேசியுள்ளார். அவர் எங்கு தங்கியிருந்தார் என்று விசாரித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்பின்பு அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவருடைய செல்போனை தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். அதோடு இந்தோனேசியா தூதரகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

வெளிநாட்டை சேர்ந்த கப்பல் கேப்டன் ஒருவரிடம், தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>