×

அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம்: உள்துறை, பள்ளி கல்வித்துறை செயலாளர்கள் பதில் அளிக்க உத்தரவு

மதுரை: அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள கோரிய வழக்கில், உள்துறை, பள்ளி கல்வித்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:  ஆசிரியர்கள் இடமாற்றத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, 2019ல் பல்வேறு வழிகாட்டுதல்கள் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

2020-2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் சம்பந்தமான கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால், நிர்வாக அடிப்படையில் முறைகேடாக பல ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்கள் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், ‘‘2020-2021ம் ஆண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் குறித்த கலந்தாய்வு நடைபெறவில்லை” என தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து உள்துறைச் செயலாளர், பள்ளி கல்வித்துறைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக். 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Interior, ,School Academia , AIADMK regime, change of teachers' workplace, interior, school education
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...