×

கொடநாடு வழக்கு குற்றவாளிகள் பயன்படுத்திய கார் உரிமையாளர், புரோக்கரிடம் டிஐஜி, எஸ்பி 3 மணி நேரம் விசாரணை

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய காரின் உரிமையாளர் மற்றும் புரோக்கரிடம் டிஐஜி, எஸ்பி நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள சயான் கடந்த மாதம் 17ம் தேதி மறு வாக்குமூலம் அளித்ததையடுத்து விசாரணை சூடு பிடித்தது. தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. கனகராஜின் அண்ணன் தனபால், எஸ்டேட் மேலாளர் நடராஜ், கொலை நடந்த அன்று நாடுகாணி காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்ஐ, தடவியல் நிபுணர்கள் மற்றும் மின் வாரிய அதிகாரிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.  இந்நிலையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் டிஐஜி முத்துசாமி தலைமையில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று குற்றவாளிகள் பயன்படுத்திய காரின் உரிமையாளர் நவ்சத் மற்றும் வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்த புரோக்கர் நவுபல் ஆகியோரிடம் டிஐஜி முத்துசாமி, எஸ்பி ஆசிஷ்ராவத் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்தது. இவ்வழக்கில் ஏற்கனவே 40 பேரிடம் விசாரணை முடித்த நிலையில் தற்போது 41 மற்றும் 42வது சாட்சிகளாக நவ்சத் மற்றும் நவுபலிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலாளியை விசாரிப்பதற்காக தனிப்படை நேபாளம் விரைகிறது
கொடநாடு எஸ்டேட்டில் கொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூருடன், மற்றொரு காவலாளியான  கிருஷ்ணதாபா வேறொரு கேட்டில் பணியாற்றி வந்துள்ளார். இந்த கொலை, கொள்ளை வழக்கில் கிருஷ்ணதாபாவிடம் ஏற்கனவே 2017ம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதற்குப்பின்னர் அவர் குடும்பத்துடன் சொந்த ஊரான நேபாளத்துக்கு சென்று விட்டார். தற்போது, மீண்டும் இவ்வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கு சென்று கிருஷ்ணதாபாவிடம் விசாரணை மேற்கொள்வதோடு, அவரை கொடைக்கானல் அழைத்து வந்து கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது எப்படி என்று விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Tags : DIG , Kodanadu case, criminals, car owner, DIG, SP, investigation
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு