கோவையில் நடுரோட்டில் சடலம் காரில் இருந்து தூக்கி வீசி பெண் படுகொலை?...திருவள்ளூரில் தனிப்படை போலீஸ் முகாம்

கோவை: கோவை  அவினாசி ரோடு சின்னியம்பாளையம் பகுதியில் ஓட்டல் அருகே ஒரு வளைவில் கடந்த 7ம் தேதி காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் நடுரோட்டில் உடல்  நசுங்கி அரை நிர்வாணமாக கிடந்தது. அவர் மீது சொகுசு கார் ஒன்று ஏறி சுமார் 100 அடி தூரம் இழுத்து  செல்லப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் சில வாகனங்கள் ஏறியதாக தெரிகிறது. இதனால் மிகவும் மோசமான நிலையில் அந்த பெண்ணின் உடல் சிதைந்து கிடந்தது.  இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் ஒரு பக்க  காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பெண்ணை பலாத்காரம் செய்து, வாகனத்திலிருந்து தூக்கி வீசி  அவர் மீது வாகனம் ஏற்றி கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.  

ஆனால் பெண்ணை தூக்கி வீசியது போன்ற வீடியோ பதிவு கிடைக்கவில்லை.  பிரேத பரிசோதனையில்  வாகனம் ஏறியதால் இறப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்  மீது ஏறிய கார், திருவள்ளூர் வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்  என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. கோவையில் பல இடங்களில் வலம் வந்த இந்த கார், திருவள்ளூர்  நோக்கி சென்று விட்டதாக தெரிகிறது. கார் உரிமையாளரை பிடித்து விசாரிக்க  தனிப்படை போலீசார் திருவள்ளூரில் முகாமிட்டுள்ளனர். இறந்த பெண் காணாமல்  போனவர்கள் பட்டியலில் இருக்கிறாரா? என குற்றம் மற்றும் குற்ற தடுப்பு வலைதள  பதிவு மூலமாக தேடும் பணி நடக்கிறது.

கேரள  மாநிலத்தை சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார்  விசாரிக்கின்றனர். பெண்ணை சொத்துக்காக கடத்தி வந்து மிரட்டி,  தாக்கி வாகனத்தில் தள்ளி விட்டு கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.  ஆனால் போலீசார் மன நலம் பாதித்து வீட்டைவிட்டு வந்த பெண்ணாக இருக்க  வாய்ப்புள்ளது, எதையும் உறுதி செய்ய முடியவில்லை என்றனர். பீளமேடு  போலீசார் கூறுகையில், ‘‘கார் பெண் மீது மோதி இழுத்து செல்லும் காட்சி அதே  பகுதியில் உள்ள ஒரு கேமராவில்தான் பதிவாகியிருக்கிறது. ஆட்டோ டிரைவர் இந்த  காட்சியை பார்த்தபடி செல்கிறார். அவரை தேடி வருகிறோம். இந்த வழக்கில் அதிக சந்தேகம், குழப்பங்கள் இருக்கிறது.  அந்த பெண் யார்? அவர் மீது வாகனம் ஏற்றியவர்கள் யார்? என கண்டறிந்தால்தான் சந்தேகங்கள் விலகும்’’ என்றனர்.

Related Stories:

>