மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் பரிதாபம் பூகம்பம், வெள்ளத்தால் 18 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும், பூகம்பமும் தாக்கியது. இதில், 18 பேர் பலியாகினர். மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டேர் அளவில் 7.1 புள்ளியாக இது பதிவானது. அகாபுல்கோ நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் பூகம்பத்தின் மையம் இருந்தது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்து சாலைகளில் பாதுகாப்பாக நின்றனர். இந்த பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயமடைந்தனர்.

அதேபோல், டுலா என்ற நகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சப்ளை பழுதாகி நின்று விட்டது. இதனால், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 17 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர்.

Related Stories: