இந்தோனேசியா சிறையில் தீ 2 பெண்கள் உட்பட 41 கைதிகள் கருகி பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 வெளிநாட்டினர் உள்பட 41 கைதிகள் பலியாகினர்.  80 பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் தன்ஜராங் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்குள்ள சி2 பிளாக்கில் நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணிக்கு மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. அக்கட்டிடத்தில் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 2 வெளிநாட்டு பெண் கைதிகள் உள்பட 41 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும், படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அந்த கட்டிடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

Related Stories:

>