திரைப்பட பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் (86), உடல்நலக்குறைவு காரணமாக அடையாறு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார். கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ண தேவர், தெய்வானை அம்மாள் தம்பதிக்கு 1935 அக்டோபர் 6ம் தேதி பிறந்தவர், ராமசாமி. தமிழ்க்கவிஞர் மற்றும் பாடலாசிரியரான அவர், பாட்டு எழுதுவதற்காக 1964ல் சென்னைக்கு வந்தார். முன்னதாக அவர் பள்ளியில் படித்தபோது ஒரு இந்தி ஆசிரியர், ‘இவன் ஒரு பைத்தியக்காரன்’ என்று விளையாட்டாக திட்டியிருக்கிறார். ‘ஆம், தமிழ்ப் புலமையில் பித்துக்கொண்ட பைத்தியக்காரன்’ என்று கூறிவிட்டு, புலமைப்பித்தன் என்று தனக்கு புனைப்பெயர் சூட்டிக்கொண்டார்.

கோவை சூலூர் பகுதியில் ஒரு நூற்பாலையில் பணியாற்றிக் கொண்டே தமிழ்ப் புலவர் படிப்பை முடித்தார். சென்னைக்கு வந்த பிறகு சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1968ல் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்துக்காக, ‘நான் யார், நான் யார், நீ யார்?’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். புலமைப்பித்தன். அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும், முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதியுள்ளார். வடிவேலு நடித்த ‘எலி’ என்ற படத்துக்கு அவர் கடைசியாக எழுதியிருந்தார்.

‘நான் யார்? நான் யார்? நீ யார்?’ என்ற பாடலை தி.நகரில் ஒரு சாலையின் ஓரமாக நின்றபடி புலமைப்பித்தன் எழுதியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது வயது 30. எம்.ஜி.ஆர் அதிமுக தொடங்கியபோது உடனிருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானதும் 1977ல் சட்ட மேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பிறகு சட்ட மேலவை துணை தலைவராகவும், தமிழக சட்டமன்ற துணை தலைவராகவும் பணியாற்றிய புலமைப்பித்தனை, 1984ல் தமிழக அரசவைக் கவிஞராக எம்.ஜி.ஆர் நியமித்தார். அவருக்கு தமிழரசி என்ற மனைவி இருக்கிறார். மகன் புகழேந்தி, மகள் கண்ணகி இருவரும் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். மகன் வழி பேரன் திலீபன், திரைப்படத்துறையில் நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கிறார்.

 ‘பாவேந்தர் பிள்ளைத்தமிழ்’ ஆகிய கவிதை நூல்களையும், ‘எது கவிதை’ என்ற புத்தகத்தையும் புலமைப்பித்தன் எழுதியுள்ளார். இதில் ‘பாவேந்தர் பிள்ளைத்தமிழ்’ புத்தகம், தெலங்கானா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வகுப்பிற்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. ெபாதுவுடமை, காதல், தத்துவம் உள்பட எல்லாவிதமான பாடல்களிலும் கொடிகட்டிப் பறந்தார் புலமைப்பித்தன். இன்று காலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் புலமைப்பித்தனின் இறுதிச்சடங்கு நடக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர். அவர் சட்ட மேலவை துணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அதிமுக தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும்  இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Related Stories: