உலக கோப்பை டி20 இந்திய அணியின் ஆலோசகராக தோனி

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராத் கோஹ்லி தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரோகித் ஷர்மா துணை கேப்டனாகவும், அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனுபவ ஸ்பின்னர் ஆர்.அஷ்வின், இஷான் கிஷன், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அஷ்வின், உலக கோப்பைக்கு தேர்வாகி உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

மாற்று வீரர்கள்: ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

அஷ்வின் தரம் குறையவில்லை

இங்கிலாந்துக்கு எதிரான  டெஸ்ட் தொடரில்  விக்கெட்களை அள்ளிய பும்ரா, டெஸ்ட்  பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் 10வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார்.   அதே நேரத்தில் கடந்த 4 டெஸ்ட்களில் ஆட வாய்ப்பு கிடைக்காதபோதும் தமிழக வீரர் அஷ்வின்  தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார்.  முதல் இடத்தில்  ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் இருக்கிறார். ஷமி 18வது இடத்திலும், இஷாந்த் 19வது இடத்திலும் நீடிக்கின்றனர்.  ஜடேஜா 21வது இடத்துக்கும், ஷர்துல் 49வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பேட்டிங் தர வரிசையில் முதல் 10 இடங்களில்  ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோர்  5, 6வது இடங்களில் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர்  தர வரிசையில்  ஜடேஜா 3வது இடத்திலும், அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர். ஷர்துல் 20 வது இடத்தை பிடித்துள்ளார்.

டி20 பேட்டிங் டாப் 10ல் கோஹ்லி, லோகேஷ் ராகுல்  மட்டும்  முறையே 5, 6வது இடங்களில் தொடர்கின்றனர். பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் தரவரிசை டாப் 10ல் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. பந்துவீச்சாளர்களில்  புவனேஷ்வர் 13வது இடத்திலும், வாஷிங்டன் சுந்தர் 19வது இடத்திலும் இருக்கின்றனர். ஆல் ரவுண்டர் வரிசையில்  ஹர்திக் பாண்டியா 20 இடத்தில் நீடிக்கிறார்.

Related Stories: