×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் லெய்லா: மெட்வதேவ் முன்னேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றுள்ளார். கால் இறுதியில் உக்ரைன் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினாவுடன் (5வது ரேங்க், 27 வயது) மோதிய லெய்லா (73வது ரேங்க், 19 வயது) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஸ்விடோலினா 6-3 என வென்று பதிலடி கொடுக்க, 1-1 என சமநிலை ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்து முன்னேற ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அதில் பதற்றமின்றி அமர்க்களமாக விளையாடிய லெய்லா 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 2 மணி, 24 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக பெரிய தொடரின் அரை இறுதிக்கு முன்னேறி அசத்தினார்.  ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்குப் பிறகு (2005) யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிக்கு தகுதி பெற்ற மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையும் லெய்லா வசமானது. மற்றொரு கால் இறுதியில் 2ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவை (8வது ரேங்க்) வீழ்த்தினார். அரை இறுதியில் லெய்லா - சபலென்கா மோத உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதியில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் (2வது ரேங்க், 25 வயது) 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் வான் டி ஸாண்ட்ஷுல்பை (117வது ரேங்க், 25 வயது) வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு கால் இறுதியில் கனடாவின் ஆகர் அலியஸ்ஸிமியுடன் மோதிய ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் 3-6, 1-3 என பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் அலியஸ்ஸிமி (21 வயது) அரை இறுதிக்கு முன்னேறினார். அதில் முன்னணி வீரர் மெட்வதேவின் சவாலை அவர் சந்திக்கிறார்.

Tags : Leila ,Medvedev ,US Open , US Open Tennis, Semi-Final, Leila, Medvedev
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்