259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் ஸ்காலர்ஷிப் பெற வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும். மேலும், கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார்.   தமிழக சட்டப் பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: தமிழத்தில் உள்ள 259 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு செம்மொழி நூலகம் என்ற பெயரில் நூலகம் ரூ.2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.  

தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.  கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும். மாதாந்திர உண்டி மற்றும் உறையுள் கட்டணம், 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளுக்கு 7 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் செலவில் பரிசுகள் வழங்கப்படும். இந்த விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கான வருமான வரம்பு 72ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவி தொகை ஆண்களுக்கு 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், பெண்களுக்கு 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

 பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், அயன் பாக்ஸ் மற்றும் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட முறையில் விடுதிகளுக்கான மளிகை பொருட்கள் தமிழ்நாடு ஒளிமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின் படி கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: