×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் சசிகலாவின் ரூ.100 கோடி பையனூர் பங்களா, நிலங்கள் முடக்கம்: பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை; வருமான வரித்துறை அதிரடி

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த விவகாரத்தில், ஜெயலலிதா தோழி சசிகலாவின் ரூ.100 கோடியிலான பையனுரில் உள்ள பங்களா மற்றும் நிலங்களை வருமான வரித்துறை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து முடக்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இதைதொடர்ந்து ஜெயலலிதா தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருக்கும்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டோருக்கு சொந்தமான 187 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு, 2019ம் ஆண்டு சசிகலாவுக்கு தொடர்புடைய கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.

இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை ஆகினர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள பையனூரில் உள்ள இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் இருந்து வாங்கிய சொகுசு பங்களா மற்றும் நிலங்களை வருமான வரித்துறையினர் பினாமி தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் முடக்கியுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை பினாமி சொத்துக்கள் தடுப்பு பிரிவு முன்னெடுப்பு அலுவலர் வி.என்.திலீப் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், பையனூர் கிராமத்தில் உள்ள 379, 380, 381, 383, 384, 386, 385, 392, 404 ஆகிய புல எண்கள் மற்றும் அதன் உட்பிரிவுகளில் அடங்கிய மொத்த பரப்பளவு 28 ஏக்கர் 17 சென்ட் நிலத்தை 1988ம் வருடத்திய பினாமி சொத்துக்கள் தடுப்பு சட்டம் பிரிவு 24ன் கீழ் முடக்கி வைப்பதாகவும், அதற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 90 நாட்களுக்குள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், சொத்தின் உரிமையாளர் வி.கே.சசிகலா என்றும், நோட்டீஸ் சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பின்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் பையனூரில் உள்ள பங்களாவுக்கு வந்தனர். அப்போது, பங்களாவின் பிரதான வாயிற்கதவை அவர்கள் கொண்டு வந்த பூட்டால் இழுத்து மூடி சீல் வைத்தனர். வாயிலில் இருந்த இரும்பு கதவிலும், சுவற்றிலும் அதற்கான நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். அவர்களுடன், திருப்போரூர் வருவாய் அலுவலர் புஷ்பராணி, பையனூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் தண்டோரா போடப்பட்டது. மேலும், முடக்கப்பட்ட சொத்துக்களின் சர்வே எண்கள் மற்றும் பரப்பளவு குறித்த விபரம் திருப்போரூர் சார்பதிவாளருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சொத்து சம்பந்தமாக எந்த பத்திரப்பதிவையும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்டுள்ள சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி மதிப்பு என தெரிகிறது. இதுவரை சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை மாவட்டத்தில் பதிவு
முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த நோட்டீசில் சொத்துக்கள் அனைத்தும் திருப்போரூர் சார்பதிவகத்தில் பதிவு செய்யப்படாமல் வடசென்னை மாவட்ட பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சி ஏற்பட்டதும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் அந்தந்த சொத்துக்களை அந்தந்த சார்பதிவகத்தில்தான் பதிவுசெய்ய முடியும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.

வாரிசுகள் என்பதால் நோட்டீஸ்
முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த நோட்டீசில் சொத்தின் உரிமையாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நோட்டீஸ் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்படாத இவர்கள் இருவருக்கும் ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘ஜெயலலிதாவின் பினாமி சசிகலா என்ற முறையில்தான் அவரின் பெயரில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள்தான் என தீபக், தீபா ஆகியோர் வாரிசு சான்றிதழ் பெற்று வைத்து உரிமை கொண்டாடி வருகின்றனர். அதனால், அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.


Tags : Sasikala ,Payyanur , Accumulation Case, Sasikala, Payyanur Bungalow, Benami Prevention Act, Income Tax Department
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...