×

ஊரடங்கு குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை: நடுநிலை பள்ளிகளை திறக்க திட்டமா?

சென்னை:  தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக அரசு பிறப்பித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பள்ளி, கல்லூரிகள் கடந்த 1ம் தேதி முதல்வர் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கல்லுாரிகள், உயிரியல் பூங்காக்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக, தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தாலும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. கொரோனா இல்லாத நிலை ஒரு மாவட்டத்திலும் ஏற்படவில்லை. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும், குறிப்பாக கேரளா மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் 10 ஆயிரம் முகாம் நடத்தி ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கலைவாணர் அரங்கில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்புகளை தொடர்ந்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் அதிகாரிகளே கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags : Chief Minister , Curfew, Principal, Counseling, Middle School
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...