ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சிகளும் ஆதரித்த நிலையில், பாஜ மட்டும் வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று, இந்திய குடியுரிமை திருத்த சட்டம், 2019ஐ ரத்து செய்யக்கோரும் அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவின்படி, இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும், எந்த குடிமகனுக்கும் சமத்துவம், சட்ட பாதுகாப்பு ஆகிய அம்சங்களை அரசு மறுக்க முடியாது. 1955ம் ஆண்டு, குடியுரிமை சட்டத்தின்படி, குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இல்லை. ஆனால், இன்றைய ஒன்றிய அரசு கொண்டுவந்த திருத்தத்தில், மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றுகிறது.  இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது. அதன்படி பார்க்கும்போது, மதத்தை அடிப்படையாக கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதனால்தான் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளது. இந்திய குடியுரிமை திருத்த  சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி  நிறைவேற்றப்பட்டது. இதற்கு ‘இந்திய குடியுரிமைத்  திருத்த சட்டம், 2019’ என்று பெயர் சூட்டப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய  நாடுகளிலிருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்த சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.  இஸ்லாமியர் இதில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளனர்.  இது மக்களை மதரீதியாக பிரிக்கிறது என்பதால், இந்த சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்த்தது. அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்க வேண்டும், மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டில் இருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களை பிரித்து பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.

வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது. இது ஏற்கெனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கி பார்ப்பதாகும்.  அரசியல்ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிக தவறானது ஆகும்.  அதிலும்  குறிப்பாக, இலங்கை தமிழர்கள் இந்த சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்களெல்லாம் வரலாமென்றால்,  இலங்கையை சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன். இதுதான்  இலங்கை தமிழருக்கு  இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதனால்தான், இந்த சட்டத்தை எதிர்க்கிறோம்.  

இந்திய மக்களிடையே பேதத்தை தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்த சட்டத் திருத்தம் தேவையற்றது; ரத்து செய்யப்பட வேண்டியது. மேலும், இச்சட்டத்தின் நீட்சியாக தேசிய மக்கள் தொகை  பதிவேடு தயாரிக்கும் பணியினையும், அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதையும் ஒன்றிய அரசு முழுவதுமாக கைவிடவேண்டும். மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில்,  இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் இந்திய மக்களிடையே மத, இனரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசை இம்மாமன்றம்  வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தினை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த தீர்மானத்தை தற்போது அவையில் முன்மொழிகிறேன்.

“ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், 2019, இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கும்உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது.  மக்களாட்சி தத்துவத்தின்படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும்.  ஆனால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள் என்பதை பொறுத்தும் பாகுபடுத்தி பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றி பாதுகாக்கவும், அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-ஐ, ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது” எனும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைசெல்வன் (விடுதலை சிறுத்தை), சதன்திருமலைகுமார் (மதிமுக), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகிய கட்சியினர் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்.

நயினார் நாகேந்திரன் (பாஜ) தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவினருக்கு தைரியம் இல்லை

தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்திட ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பிறகு, அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, ``இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் தைரியம் இல்லை. ஆகையினால் அதிமுகவினர் வெளியில் ஓடி விட்டார்கள்” என்றார்.

முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது  பாஜ கருத்து

நயினார் நாகேந்திரன் (பாஜ) தீர்மானத்தை எதிர்த்து பேசியதாவது: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. யாரேனும் ஒரு இடத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து தெரித்தால் தமிழக பாஜ குரல் கொடுக்க தயாராக உள்ளது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார். அதேநேரம், இந்த தீர்மானம் வருவதற்கு முன்பே, அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்ததால், தீர்மானம் வந்தபோது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

Related Stories:

More
>