கல்லூரி விடுதிகளில் 'செம்மொழி நூலகம்'; இடஒதுக்கீடு, சமூகநீதி குறித்து புத்தகம்: பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் 30 அறிவிப்புகள்

சென்னை : கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 08) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலன்) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

1. 259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்.

2. 259 கல்லூரி விடுதிகளுக்கு 1 கோடியே 44 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.

3. 40 விடுதிகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் பொட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.

4. 259 கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

5. இயக்கங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு IFHRMS திட்டத்துக்காக 85 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

6. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

7. கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்.

8. கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டனங்கள் 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் உயர்த்தி வழங்கப்படும்.

9. விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

10. மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளுக்கு 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பரிசுகள் வழங்கப்படும்.

11. 20 கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கு 23 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் முக அங்கீகார அடிப்படையில் பயோ-மெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும்.

12. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான ஆண்டு வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

13. விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ள 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

14. 7 மாணவியர் விடுதிகளுக்கு 91 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

15. விடுதி மாணவ, மாணவிகளுக்கான பல்வகை செலவினத் தொகை 4 கோடியே 80 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.

16. 234 பள்ளி கட்டிடங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதிகள் 4 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

17. கள்ளர் பள்ளி கட்டிடங்களில் 6 கோடி ரூபாய் செலவில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

18. 15 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும்.

19. அனைத்டு கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஆங்கில வழியிலான வகுப்புகள் தொடங்கப்படும்.

20. கிராமப்புற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

21. நரிக்குறவர் மற்றும் சீரமரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்

22. இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

23. இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டிகளின் எண்ணிக்கையினை 2,000-லிருந்து 3,000 ஆக உயர்த்தி 48 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

24. கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மானவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் மற்றும் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் அளிக்கப்படும்.

25. 2 பள்ளி விடுதிகள் 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும்.

26. 2 விடுதிகளுக்கு 6 கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

27. மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட முறையில் விடுதிகளுக்கான மளிகைப் பொருட்கள் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி கொள்முதல் செய்யப்படும்.

28. சிறப்பாக செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்படும்.

29. விடுதி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்ற போட்டிகள் கலைத் திருவிழா என்ற பெயரில் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

30. இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ஒரு புத்தகம் வெளியிடப்படும்.

ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டார்

Related Stories:

>