திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ₹18 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

* நோயாளிகள் இடமின்றி தவிப்பு

* கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ₹18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனை வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்னனர்.திருப்பத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனை மாவட்ட அந்தஸ்து உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 800க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது இந்த மாவட்ட அந்தஸ்து உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து, மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவு, தாய் சேய் வார்டு, பச்சிளம் குழந்தைகள் வார்டு, உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சை மையங்கள் உள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் மாதத்திற்கு 500க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. பெண்கள் பிரசவம் பார்ப்பதற்காக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும், மாதாந்திர பரிசோதனைக்கும் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்தாண்டு மாதத்திற்கு 500க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனையில் மருத்துவ நிர்வாகம் சரிவர செயல்படாத காரணத்தினாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளிடம் அலட்சியம் காட்டுவதால் தற்போது அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் வரத்து குறைந்துள்ளது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் மாதாந்திர பரிசோதனையும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் கடந்த அதிமுக ஆட்சியில் ₹18 கோடி மதிப்பில் ஆறு தளம் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடத்தில் அனைத்து வார்டுகளும் உள்ளது. மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம், தாய் சேய் நல மகப்பேறு வார்டு, பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சுமார் 300 நோயாளிகள் படுக்கக் கூடிய அளவில் படுக்கை அறைகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 6 மாடி கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான ஆக்சிஜன் பைப்புகள் அடங்கிய சிறப்பு வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கி கட்டிமுடிக்கப்பட்ட இந்த கட்டிடம் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.  ஆனால், ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் மருத்துவமனை நிர்வாகம் இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் தாய் சேய் நல மகப்பேறு வார்டு மற்றும் பெண்கள் வார்டுகளில் நோயாளிகள் இடமின்றி தரையில் படுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் இந்த கட்டிடம் ஏன் திறக்கப் படவில்லை என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கேட்டால் அலட்சியமான பதிலை மருத்துவ அலுவலர் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாவட்ட அந்தஸ்துள்ள மருத்துவமனை என்று பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

ஆனால் அங்கு மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சிகிச்சை முறைகள் மிகவும் தரம் தாழ்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பணம் கொடுத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மகப்பேறு வார்டில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களிடம் அறுவை சிகிச்சை என்றால் கணிசமான தொகையை பெற்றுக் கொண்ட பின்புதான் நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அலுவலர் உடனடி ஆய்வு மேற்கொண்டு இந்த கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரத்த வங்கியில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ரத்தம் கடத்தல்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி உள்ளது. இதில் அவசர காலத்தில் ரத்தம் சேமித்து வைத்து உயிருக்கு போராடுபவர்களுக்கு ரத்தம் வழங்க வேண்டும். ஆனால் இங்குள்ள ரத்த வங்கியில் உயிருக்கு போராடும் கர்ப்பிணிகள் மற்றும் விபத்தில் ரத்தத்தை இழந்தவர்களுக்கு ரத்தம் வழங்க வேண்டும் என்றால் தாங்கள் வேறு ஒரு நபரிடம் இருந்து ரத்தம் கொடுத்தால் மட்டுமே ரத்தம் செலுத்தப்படும் என்று ரத்த வங்கி மருத்துவர் நிர்ப்பந்தித்து வருகிறாராம். மேலும் ரத்த வங்கியில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் ரத்தம் கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முடங்கி கிடக்கும் உடல் பரிசோதனை கருவிகள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா 2ம் அலை  காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள், வியாபாரிகள் சங்கத்தினர், ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை வழங்கினர். மேலும் நவீன படுக்கைகளும் வழங்கப்பட்டது. சுமார் பல கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட இந்த இயந்திரங்கள் அனைத்தும் மூட்டை மூட்டையாக மருத்துவமனையில் குப்பைகளாக போடப்பட்டுள்ளது.

மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை நியமிக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அரசு மருத்துவமனை என்றும், மாவட்ட அந்தஸ்துள்ள மருத்துவமனை என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய 4 அரசு மருத்துவமனைகள் உள்ளது. இந்த நான்கு அரசு மருத்துவமனைகளுக்கும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நியமிக்கப்படாமல் வேலூரில் உள்ள மருத்துவ இயக்குனர் கண்காணித்து வருகிறார். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தனி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>