1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜ நாராயண பெருமாள் கோயில் பாழடைந்து கிடக்கும் அவலம்

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் சுமார் 1500 ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலின் தென்மேற்கு திசையில் திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி பிரதான சாலையை ஒட்டி மிக பழமை வாய்ந்த ஸ்ரீராஜ நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக கடந்த 2003ம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் கோயிலில் போதிய பராமரிப்பு இல்லாததால் பக்தர்களின் வருகை குறைந்து வருமானம் இல்லாமல் கோயில் கருவறையில் உள்ள மூலவருக்கு விளக்கேற்று கூட வழியில்லாமல் தற்போது பரிதவித்து வருகின்றனர்.

மேலும் கோயில் உட்பகுதியில் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து இரும்பு கம்பிகள் தெரிகிறது. கட்டிடத்தில் விரிசல் மற்றும் விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி பாழடைந்து காணப்படுகிறது, இதனால் பக்தர்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர். மிகப்பழமை வாய்ந்த இக்கோயிலை புனரமைக்க மாவட்ட நிர்வாகமும், துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பஜனை குழு தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது : எங்கள் குழு தான் பஜனை செய்து வருகிறது. இக்கோயிலுக்கு அர்ச்சகர் மற்றும் கோயில் மேளம் இல்லாததால் திருமணம் நடைபெறவில்லை இதனால் கோயிலுக்கு வருவாய் இல்லை. போதிய பராமரிப்பு கிடையாது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கோயிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

More