×

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் : அதிமுக, பாஜக வெளிநடப்பு

சென்னை:ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் 1955ம் ஆண்டு உள்ள குடியுரிமைச் சட்டத்தின் படி, மதம் ஒரு அடிப்படை இல்லை. ஆனால், ஒன்றிய அரசு 2019ம் ஆண்டு நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மதம் ஒரு அடிப்படை என்கிறது. இந்த சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்த்தது. பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும் முன்பே, தமிழக சட்டமன்றத்தில் அந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முந்தைய அரசிடம் திமுக சார்பில் கோரிக்கை வைத்தோம். எங்கள் ேகாரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தால், இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசு இலங்கை தமிழர்களைப் பற்றி கவலைப்படவில்லை. உலகின் மிகப் பெரிய மக்கள் ஆட்சி நடைபெறும் நாடாக இந்தியா திகழ்வதற்கு காரணம், வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதுதான். ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம், அது நிறைவேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது. ரத்து செய்யப்பட வேண்டும். இதை வலியுறுத்தி, பின்வரும் தீர்மானத்தை இந்த மன்றத்தில் நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி, தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

‘‘ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது. மக்களாட்சி தத்துவத்தின் படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும், உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது, அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும், பாகுபடுத்தி பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலை நிறுத்தவும், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ஐ ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லை. அதனால்தான் அதிமுகவினர் ஓடிவிட்டார்கள் என்றார்.
இதையடுத்து காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, மமக, தவாக, கொமதேக ஆகியோர் ஆதரித்து பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



Tags : குடியுரிமை திருத்தச் சட்டம்
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு,...