திருச்செந்தூர், உடன்குடி, ஓட்டப்பிடாரம் யூனியன் பகுதிகளில் சாலைகளில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் நடவடிக்கை

திருச்செந்தூர் : திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் ராணி, பிடிஓ முத்துகிருஷ்ணராஜா, உடன்குடி யூனியன் பிடிஓக்கள் நாகராஜன், பொற்செழியன், ஓட்டப்பிடாரம் யூனியன் பிடிஓக்கள் வெங்கடாசலம், இப்ராகிம் சுல்தான் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகள், சாலையின் சாலைகள், இணைப்பு சாலைகள், மைய பகுதிகள், பொது இடங்கள் போன்ற இடங்களில் தனியாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்களின் மீதும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கப்படுகிறது.

இதனை அமைக்கும் முன் கலெக்டரிடம் அதற்கான அனுமதியை பெற வேண்டும். அனுமதி கிடைத்த பிறகு அதில் இடம்பெறும் விளம்பரம் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து விளம்பர கட்டணம் செலுத்தி, அனுமதி பெற வேண்டும். இவ்வாறு இல்லாத விளம்பரங்கள் முறைகேடான விளம்பரங்கள் ஆகும். அரசு அலுவலர்களின் கண்காணிப்பின்றி அமைக்கப்படும் முறைகேடான விளம்பர கட்டமைப்புகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

சாலையோரங்களில், சாலையின் மையப்பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அமைக்கப்படும் விளம்பர பலகைகளால் வாகன ஓட்டுநர்களுக்கு கவன சிதறல் ஏற்பட்டு, விபத்து நடந்து உயிர் சேதங்கள் உண்டாகிறது. முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர தட்டிகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பேனர்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தப்படும். மேலும் அனுமதியின்றி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதனிடையே உடன்குடி அடுத்த வெள்ளாளன்விளையில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர போர்டுகளை யூனியன் அலுவலக ஊழியர்கள் அகற்றினர்.

Related Stories:

More
>