×

பாம்புகளை மீட்கும் கேரள பாட்டி

நன்றி குங்குமம் தோழி

கேரளாவின் கொச்சி நகரை சுற்றியுள்ள வீடுகளுக்குள் பாம்புகள் இருந்தால் அவர்கள் முதலில் தேடுவது பாம்பு பிடிக்கும் பாட்டி வித்யா ராஜூவைதான். ஒரு போன் அழைப்பு வந்தால் போதும் அது நடுநிசியானாலும் பறந்து செல்கிறார் வித்யா. 60 வயதான அவர் ஒன்றும் பாம்பு பிடிக்கும் தொழிலாளி அல்ல. பீகாரை சேர்ந்த வித்யாவின் கணவர் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வித்யாவும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். தற்போது கொச்சி பன்னம்பில்லி பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

‘‘கோவாவில் என் கணவர் பணியாற்றியபோது அங்கு அவரது அலுவலகம் அருகே இருந்த ஒருவர் பாம்புகள் பற்றி பாடம் எடுத்து வந்தார். மிக சுவாரஸ்யமாக இருந்ததை தொடர்ந்து நானும் அவரிடம் பாம்புகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினேன். அதனை தொடர்ந்து பாம்புகளை எவ்வாறு பிடிப்பது என்று கற்றுக்கொண்டேன். இதுவரை 1000க்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளேன். அடிப்படையில் நான் ஒன்றும் பாம்பு பிடிப்பவர் அல்ல. பாம்புகளை மீட்பவர் தான். நான் பிடிக்கும் பாம்புகளை வனத்துறையிடம் ஒப்படைத்துவிடுவேன்.

அவர்கள் பாம்புகளை மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.பொதுவாக எர்ணாகுளம் பகுதியில் இருக்கும் பாம்புகள் விஷத்தன்மையற்றவை’’ என தனது அனுபவங்களை தொடர்ந்தார் வித்யா. ‘‘பாம்பை பிடிப்பதற்கு என நான் முறையான பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. எனது விருப்பம் காரணமாகவே பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம்பத்தில் நான் பாம்புகளை பிடித்தபோது அவை என்னை கடிக்கவும் செய்தன. இதற்காக ஒரு முறை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையும் பெற்று இருக்கிறேன். அப்போது தான் மருத்துவர் நீங்கள் கையால் பாம்பை பிடிக்காதீர்கள் கம்பை பயன்படுத்துங்கள் என்றார். இதையடுத்து கம்பை பயன்படுத்தி அவற்றை பிடித்து வருகிறேன்.

பொதுவாக கொச்சியில் மலைப்பாம்பு காணப்படுவதில்லை. கொச்சி கட்டாரிபா பகுதியில் ஒருமுறை அடைகாத்திருந்த பாம்பு முட்டைகளை மீட்டபோது அதில் இருந்து ஏராளமான பாம்புகுட்டிகள் வெளியேறின. அவற்றை பத்திரமாக ஒரு மரப்பெட்டியில் அடைத்து வைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தேன். இந்த அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாதது. எனது பாம்பு பிடிக்கும் பணிக்கு எனது பிள்ளைகள் மற்றும் கணவர் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். நான் ஒருபோதும் பாம்பை தனியாக சென்று பிடிப்பதில்லை. கூடவே எனது பிள்ளைகளோ அல்லது கணவரோ வருவார்கள். இயற்கையை பாதுகாக்கும் விதமான இந்த பணியால் எனது மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது’’ என்றார் வித்யா.

தொகுப்பு: பா.கோமதி

Tags : Kerala Grandmothers Recovering Snakes ,
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!