×

தமது பாடல்களில் தமிழை வீழச் செய்யாமல் வாழச் செய்தவர் புலமைப்பித்தன்!: வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்..!!

சென்னை: கவிஞரும், எழுத்தாளருமான புலமைப்பித்தன் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடலுறுப்பு செயல்பாடுகள் குன்றியதன் காரணமாக புலவர் புலமைப்பித்தன் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

இதனையடுத்து அவரது உடல் நீலாங்கரையை அடுத்துள்ள வெட்டுவாங்கேணி இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புலமைப்பித்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

புலமைப்பித்தன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அதிமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர், திராவிட கொள்கைகள் மேல் பற்று கொண்டு அரசியலில் தீவிரமாக இயங்கிய புலமை பித்தன், எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர் என்றும் பெரியார் விருது பெற்றவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

வைகோ:

தன்மான உணர்வும், தமிழ் இன பற்றும், ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப்பித்தனின் மறைவு வேதனை தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், தமது பாடல்களில் தமிழை வீழச் செய்யாமல் வாழச் செய்தவர் என்றும் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து:

தமிழ், தமிழர் என்ற இரண்டு அக்கறை கொண்ட புலவர் புலமைப்பித்தனின் மறைவு துயரம் தருகிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.  குடும்பத்தார்க்கும் தமிழன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.


Tags : Scholar ,Vaiko ,Ramadas , Song, Tamil, Scholar, Vaiko, Ramadas mourning
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...