மணப்பாறை அருகே கிராவல் மண் திருடியவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம்-பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்

மணப்பாறை : மணப்பாறை அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சத்திரப்பட்டி குளத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிச் செல்வதாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை சத்திரப்பட்டி குளத்திற்கு சென்றபோது ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண்ணை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசாரை பார்த்ததும் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த அந்த கும்பல் வாகனங்களை போட்டு விட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதி வழியாக ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளது குறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து மணப்பாறை போலீசார் பொக்லைன் மற்றும் டிப்பர் லாரி ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சீத்தப் பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: