×

திண்டுக்கல்- பழநி ரோடு பிரிவில் கால்வாயில் கிடந்த கழிவுகள் அகற்றம்

*பொதுமக்கள் பாராட்டு

சின்னாளபட்டி : தினகரன் செய்தி எதிரொலியாக திண்டுக்கல்- பழநி ரோடு பிரிவு பள்ளப்பட்டியில் கால்வாயில் அடைபட்டு கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டது. திண்டுக்கல்-  மதுரை- கரூர் தேசிய நான்கு வழிச்சாலை திண்டுக்கல்- பழநி ரோடு பிரிவு  பள்ளப்பட்டி ஊராட்சி பகுதியில் மேம்பாலம் உள்ளது. பாலத்தில் இருந்தும்,  சர்வீஸ் சாலையில் இருந்தும் வரும் மழைநீர் பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள  நீர்வரத்து வாய்க்கால் வழியாக அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு செல்கின்றன.  

ஆனால் தற்போது இந்த நீர்வரத்து வாய்க்காலில் குப்பை, பிளாஸ்டிக், இரும்பு  கழிவுகள், வாகனங்களின் கண்ணாடி துகள்கள் அடைத்திருப்பதால் மழைநீர் செல்ல  வழியின்றி வீணாகுகிறது. மேலும் பாலத்தின் மேற்குப்புற பகுதியில் பழுதடைந்த  வாகனங்களை தொடர்ந்து நிறுத்தி வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறும்  ஏற்படுகிறது என கடந்த செப்.1ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி  வெளியானது.

இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில்  நேற்று மேம்பாலத்தின் இருபுறமும் நீர்வரத்து வாய்க்கால்களை அடைத்திருந்த  இரும்பு, பிளாஸ்டிக், குப்பை கழிவுகள், வாகனங்களின் கண்ணாடி துகள்கள்  பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இந்நடவடிக்கையால் தற்போது மழைநீர்  தடையின்றி நீர்நிலைகளுக்கு செல்வதுடன், அப்பகுதி மக்கள் சிரமமின்றி நடந்து  செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட  கலெக்டர், செய்தி வௌியிட்ட தினகரன் நாளிதழுக்கு பள்ளப்பட்டி ஊராட்சி மக்கள்  பாராட்டு தெரிவித்தனர்.


Tags : Dindigul- Palani Road , Chinnalapatti: Echoes of Dinakaran's news
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து