மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா

மதுராந்தகம்: கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் அரசினர் இந்து மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிந்தது.

இதைதொடர்ந்து, அவர்கள் எந்தெந்த வகுப்பில் பாடம் நடத்தினார்கள் என கணக்கெடுக்கப்பட்டு அந்த வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2வது முறையாக பள்ளியில் நடத்திய பரிசோதனையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு ஒரு மாணவிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, 9, 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் 336 மாணவ, மாணவிகளுக்கு நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று தெரியும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: