உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாநில தேர்தல் ஆணையத்திடம் அரசு தகவல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின்போது கொரோனா தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.  

இதில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் செல்வவிநாயகம், முதன்மை தேர்தல் அலுவலர்கள் க.அருண்மணி, கு.தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் மற்றும் வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

அப்போது, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மற்றும் தொடர்புடைய சுகாதாரத்துறை அலுவலர்கள் இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.  தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு தேர்தல் ஆணையர் தமிழக அரசை கேட்டுக்கொண்டார். அதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories:

>