சபாநாயகர் இருக்கை குறித்து அவையில் அவதூறு பேச்சு: வார்த்தையை திரும்ப பெற்ற அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்

சென்னை: சபாநாயகர் இருக்கை குறித்து அவதூறாக பேசிய வார்த்தையை, அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் திரும்ப பெற்றார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று சட்டத்துறை, மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கன்னியாகுமரி உறுப்பினர் தளவாய் சுந்தரம்(அதிமுக) பேசுகையில், ‘‘சபாநாயகர் அமர்ந்திருக்கும் இருக்கை இந்தியாவில் 4 இடங்களில் தான் உள்ளது. ஜனாதிபதி மாளிகை, மக்களவை, மாநிலங்களவை மற்றும் இங்கே இருக்கிறது. இந்த இருக்கையில் நீங்கள் அமர்ந்திருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.

தென் தமிழகத்தில் இருந்து சபாநாயகர்களாக, செல்ல பாண்டியன், பி.எச்.பாண்டியன், ஆவுடையப்பன் ஆகியோருக்கு பிறகு நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், ஒரு நாளும் அதிமுக . உறுப்பினர்கள் அந்த இருக்கை பக்கம் வரமாட்டோம். தொடமாட்டோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், சட்டப் பேரவையில் கடந்த ஆட்சியில் நடந்த நிகழ்வு குறித்து சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவை முன்னவர் துரைமுருகன், ‘‘இது அவை நடவடிக்கையை மீறியதாகும். ஒன்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவை உரிமை மீறலாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய தளவாய் சுந்தரம்,  “இதுபோன்ற நிகழ்வுகள் முன்பு நடந்தது. இனிமேல் நடக்காது என்று தான் நான் சொன்னேன்” என்றார்.

மீண்டும் பேசிய துரைமுருகன், “நான் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் தப்பாக பேசியதை தப்பு என்று சொல்கிறேன். முதலில் சபாநாயகர் இடத்திற்கு நீங்கள் என்றும் வர முடியாது. எப்பவுமே இனி திமுகவுக்கு தான். ஆனால், சபாநாயகரை பார்த்து நீங்கள் சொன்னது அவதூறான சொல். ஒன்று அந்த வார்த்தையை திரும்ப பெறச் சொல்லுங்கள். அல்லது மன்னிக்கவும் என்று சொல்ல சொல்லுங்கள். நான் விட்டுவிடுகிறேன்” என்றார். பின்னர், அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் அந்த வார்த்தையை திரும்ப பெற்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>