மொட்டைபோடும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.5,000: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருக்கோயில்களில் மொட்டைபோடும் பணியாளர்களுக்கு, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழக சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தின்போது திருக்கோயில்களில் மொட்டைபோடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி.செழியன், நந்தகுமார் ஆகியோர் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினர். அணைக்கட்டு தொகுதி நந்தகுமார் (திமுக): மொட்டைக்கு இனி கட்டணம் இல்லை என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால், பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்திருக்கிறது. ஆனால், ஒரு சில அரசியல் கட்சியினர் இதையும் விமர்சனம் செய்கிறார்கள்.

பொதுவாக பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை கேட்கும் நிலை இருக்கிறது. பக்தர்கள் தங்கள் உயிரையே காணிக்கையாக செலுத்துவது போல தாங்கள் பிரியப்பட்டு வளர்த்த முடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். எனவே, கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம். மொட்டை அடிப்பவர்களுக்கு பணி நிரந்தரம் எதுவும் இல்லை.

யார் மொட்டை அடித்தாலும், அதற்கு உண்டான கட்டணமாக ரூ.30 கோயில்கள் மூலம் வழங்கப்படுகிறது. அதுவும் போதுமானதாக இல்லை. ஏற்கனவே ரூ.5, ரூ.10 இனமாக வாங்கிக் கொண்டு இருந்தோம். இப்போது அதுவும் தடைபட்டு விட்டது என்று எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக, அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1,749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>