×

கோ-ஆப்டெக்ஸுக்கு தரமில்லாத துணி வாங்கிய விவகாரம் பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்: நஷ்டம் குறித்து விசாரிக்க குழு அமைப்போம்; அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

சட்டப்பேரவையில். வேதாரண்யம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், ‘‘கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பதிலுரையில் கோ-ஆப்டெக்ஸ்க்கு உதவாத துணிகளை வாங்கி வைத்து நஷ்டப்படுத்தி விட்டார்கள் என்று குற்றம் சுமத்தினார். தணிக்கை செய்யப்பட்டிருக்கிற 9 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் ரூ.14.82 கோடி லாபம் தானே தவிர நஷ்டம் இல்லை’’ என்றார்.
சபாநாயகர் அப்பாவு: அமைச்சர் காந்தி பதிலுரையில் பேசும் போது உதவாத துணிகளை வாங்கினார் என்று ஒரு கருத்தை பதிவு செய்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை மாற்றி, தரமில்லாத துணிகளை வாங்கினார்கள் என்று பதிவு பண்ணிக்கொள்கிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் காந்தி பதிலுரையில் குறிப்பிடுகின்ற போது, கோ-ஆப்டெக்ஸ்க்கு வாங்குகின்ற துணி மோசமாக இருப்பதாக சொன்னார். கோ-ஆப்டெக்ஸ்க்கு வாங்குகின்ற துணிகள் எல்லாம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து வாங்கப்படுகின்ற துணிதான். அதில் உள்ள உறுப்பினர்களிடம் இருந்து பெறபட்ட துணியை தவிர, மற்ற இடத்தில் வாங்கவில்லை. ஆகவே, உறுப்பினர்களிடம் இருந்து வாங்குகின்ற அந்த துணியை கொச்சைப்படுத்தி பேசுவது சரியல்ல. ஏனென்றால் அது நெசவாளர்களை கொச்சைப்படுத்துவது போல் தெரிகிறது. அதிமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்கு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது.

அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவர் சொன்னதுபோல் கோ-ஆப்டெக்ஸ் நல்ல நிறுவனம் தான். ஆனால், அதில் வாங்கின துணி, தரம் குறைந்த துணி என்று தான் அமைச்சர் காந்தி சொன்னார். அதனால், அந்த துணி விற்கவில்லை. விற்காததால் என்ன பண்ணினார்கள் என்று தெரியுமா?. அதுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். அதுக்கு எவ்வளவு செலவு என்றால், 4 கோடி ரூபாய். ஆகவே, இதில் ஒன்றும் தவறு இருப்பது மாதிரி தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி: கைத்தறி நெசவாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் நெய்த துணிகள் எல்லாம் இந்த கோ-ஆப்டெக்ஸ் மூலமாக பெறப்பட்டு, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விதத்தில் தான் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது. ஆகவே, அதை ஒரு தவறுதலாக பேசும் போது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவரும். அதிமுக அரசு கொரோனா தொற்று இருந்த காலத்தில், நெசவாளர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக ரூ.340 கோடி மானியமாக வழங்கப்பட்டது.

துரைமுருகன்: கோ-ஆப்டெக்ஸ் நல்ல நிறுவனம் தான். தவறாக வாங்கி விட்டோம் என்று சொல்வதில் என்ன தப்பு உள்ளது. உங்கள் ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் வளமாக லாபத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

அமைச்சர் ஆர்.காந்தி: எதிர்க்கட்சி தலைவர் கோ-ஆப்டெக்ஸ் சொசைட்டியில் தான் வாங்குகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அங்கே என்ன நடக்கிறது என்று, முன்னாள் முதல்வருக்கு தெரியுமா என்று ெதரியவில்லை. கோ-ஆப்டெக்ஸில் சொசைட்டில் மட்டும் வாங்கவில்லை. வெளியில் இருந்து வாங்கினாலும், சொசைட்டியில் போட்டு அந்த சொசைட்டி பெயரில் வாங்குகிறோம். 2016-17ம் ஆண்டு அந்த கோ-ஆப்டெக்ஸில் ரூ.7 கோடி நஷ்டம், 2017-18ல் ரூ.6 கோடி நஷ்டம். மொத்தத்தில் 13 கோடி நஷ்டம். ஆடிட்டிங் ரிப்போர்ட் என்னிடம் உள்ளது. இது குறித்து விசாரிக்க நாங்கள் ஒரு குழு அமைத்துள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Go-Optex ,Committee to ,Minister ,R. Gandhi , DMK-AIADMK debate on Co-optex purchase of substandard cloth: We will set up a committee to inquire into the loss; Information from Minister R. Gandhi
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...